கோரிக்கையை ஏற்காவிட்டால் முதல்வர் வீடு முற்றுகை: தற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

கோரிக்கையை ஏற்காவிட்டால் முதல்வர் வீடு முற்றுகை: தற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
Updated on
1 min read

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யாவிட்டால், முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதுடன், தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம் என்று தற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தனியார், அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு ஆகிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் கூட்டம், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தமிழரசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. ஆர்.மேகநாதன், பி.மாதவி, பி.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், “அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய உயர் கல்வித் துறை உருவாக்கியுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

அரசின் இந்த நடவடிக்கையால் தனியார், அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு ஆகிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் வேலை கிடைக்காத நிலை உருவாகும்.

பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் பிஎச்டி, எம்பில், செட், நெட் முடித்துவிட்டு அரசுக் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தம் செய்ய வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் குறித்து தமிழரசன் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல், அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு உதவி பெறும், பல்கலைக்கழக உறுப்பு ஆகிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் பிஎச்டி, எம்பில், செட், நெட் தகுதி பெற்றவர்கள் ஆகியோரின் லட்சக்கணக்கான வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும்.

மேலும், சென்னையில் உள்ள முதல்வரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதுடன், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in