Published : 07 Feb 2021 03:48 PM
Last Updated : 07 Feb 2021 03:48 PM

சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துக: அன்புமணி ராமதாஸ்

தருமபுரி 

சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தருமபுரி மாவட்ட மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான தொடக்க நிலைப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தக் கனவுத் திட்டம் நிறைவேற்றப்படவிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

தருமபுரி மாவட்டத்தில் தொழில்வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அங்கு சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தான் கடந்த 2000-வது ஆண்டுகளின் தொடக்கத்தில் எழுப்பியது.

சட்டப்பேரவையில் இதுகுறித்து பாமக உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்ததன் பயனாக 2008-09 ஆம் ஆண்டில் தருமபுரி சிப்காட் திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போதைய ஆட்சியில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அதகப்பாடி, தடங்கம், அதியமான் கோட்டை, பாலஜங்கமன அள்ளி ஆகிய இடங்களில் 1183.05 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள், 550.35 ஏக்கர் பட்டா நிலங்கள் என மொத்தம் 1733.40 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவில்லை.

தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பல முறை நான் கடிதம் எழுதினேன். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினராகப் பணியாற்றிய போது மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிகாரிகளைச் சந்தித்து சிப்காட் வளாகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினேன்.

அவற்றின் பயனாக தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பட்டா நிலங்களை கையகப்படுத்துவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், முதற்கட்டமாக 1183 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள், உணவு பதன ஆலைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படவிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்த சிப்காட் வளாகக் கோரிக்கை இப்போது செயல்வடிவம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
தொழில் வளர்ச்சியில் தமிழகத்தில் கடைசி இடத்தில் இருப்பது தருமபுரி மாவட்டம் தான்.

இந்நிலையை மாற்ற சிப்காட் வளாகம் அமைக்கப்படுவது மிகுந்த பயனளிக்கும். தருமபுரி மாவட்டத்தில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கும் போதிலும், தொழிற்சாலைகள் இல்லாததால், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெங்களூர், சென்னை என பிற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர்.

சிப்காட் வளாகம் செயல்பாட்டுக்கு வரும்போது அவர்களில் பெரும்பான்மையினர் சொந்த ஊருக்கு திரும்பி பணியாற்றும் நிலை உருவாகும். இது தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிம்மதியைத் தரும்.

தருமபுரி மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பெருமளவில் துணை நிற்கக் கூடிய சிப்காட் தொழில் வளாகத்தை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாகப் பெற்று பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்குத் தேவையான நிர்வாக ஆணைகளையும், சிப்காட் வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x