கனிமொழி எம்.பி மதுரையில் நாளை சுற்றுப்பயணம்: கருணாநிதி சிலையமைக்கும் இடத்தையும் பார்வையிடுகிறார்

கனிமொழி எம்.பி மதுரையில் நாளை சுற்றுப்பயணம்: கருணாநிதி சிலையமைக்கும் இடத்தையும் பார்வையிடுகிறார்
Updated on
1 min read

திமுக மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, நாளை மதுரை தெற்கு மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

காலை 9 மணிக்கு மதுரை வரும் அவர், மதுரை ஆர்.டி. ராகவையர் மஹாலில், அனைத்து சமுதாய சங்கங்களின் நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

10 மணிக்கு ஜீவாநகர் பகுதிக்குச் செல்லும் அவர், அங்கு அப்பளத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுடன் உரையாடுகிறார். பிறகு டி.வி.எஸ். நகரில் கட்டப்பட்டுவரும் ஜீவாநகர் பாலத்தைப் பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து உழவர் சந்தை வியாபாரிகளுடன் சந்திப்பு, மாடக்குளம் கண்மாயைப் பார்வையிட்டு விவசாயிகளுடன் ககந்துரையாடல், பாத்திமாநகரில் மீன் வியாபாரம் செய்யும் பெண்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பகல் 12.10 மணிக்கு பரவை செல்லும் அவர் அங்குள்ள மகாத்மா காந்தி மற்றும் அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பிறகு அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

கலைஞர் சிலை

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 3.45 மணிக்கு சிம்மக்கல் வரும் அவர் எதிர்காலத்தில் திமுக தலைவர் கலைஞருக்கு சிலை வைப்பதற்காக திமுக தேர்வு செய்துள்ள சிம்மக்கல் ரவுண்டானா பகுதியைப் பார்வையிடுகிறார். 3.55க்கு மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் தாவூத் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் பேசுகிறார்.

மாலை 4.15க்கு அனைத்து சிறு வியாபாரிகள் சங்க கூட்டம், 5.10க்கு சலவைத் தொழிலாளர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், 5.40 மணிக்கு டி.பி.கே. சாலையில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

பிறகு, கரோனா ஒழிப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பாராட்டுகிறார். இரவு 7 மணிக்கு ஜீவாநகர் சந்திப்பில் மூன்று போஸ்ட் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in