Published : 07 Feb 2021 01:48 PM
Last Updated : 07 Feb 2021 01:48 PM

மத்திய அரசின் துறைகளுக்கு கூட்டுச் செயலாளர்களாக தனியார் துறைகளிலிருந்து 30 பேர் நியமனமா?- கி.வீரமணி கண்டனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கூட்டுச் செயலாளர்களாக தனியார் துறைகளிலிருந்து 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சமூகநீதியை ஒழித்துக் கட்டுவதில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு கண்ணுங்கருத்துமாய் இருந்து, இட ஒதுக்கீட்டை - அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை அறவே பறிக்கும் செயல்களை செய்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே உடைத்து வருவது கண்கூடு.

கல்வி, வேலைவாய்ப்பு நியமனங்களில் காலங்காலமாய் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் இட ஒதுக்கீடு காரணமாக பெற்று வரும் சமூகநீதி நாளும் பல்வேறு துறைகளில் அதிரடியாக சிதைக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஓர் அறிவிப்பு மத்திய அரசு சார்பில் வந்துள்ளது!

மத்திய அரசின் முக்கிய இலாக்காக்களை நிர்வகிக்கும் கூட்டுச் செயலாளர்கள் (Joint Secretary) என்ற பொறுப்பிற்கு முப்பது பேரை, தனியார் துறையிலிருந்தும், வெளியிலிருந்தும் மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக நியமனம் செய்வார்களாம்!

இது சமூகநீதிக்கோ, இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கோ உடன்பட்டதில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 315 இன் கூற்றுப்படி (Article 315) மத்திய - மாநில அரசுகளின் அதிகாரிகள் நியமனங்களை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனோ அல்லது மாநில சர்வீஸ் கமிஷனோதான் நியமிக்க வேண்டும். அதுதான் சட்ட விதிமுறை. காலங்காலமாய் கடைப்பிடித்து வரும் நடைமுறை. அவற்றின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் ஏற்கத்தக்கதல்ல!

அதன்படிதான் ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ். போன்ற முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு அந்தந்த சர்வீஸ் கமிஷன் தனியே சுதந்திரமாகத் தேர்வு முறை, அதன்பிறகு நேர்காணல் முறை வைத்து, அப்படி தேர்வு செய்யப் பெற்றவர்களும்கூட பிறகு அவர்களுக்கென உள்ள பயிற்சிப் பள்ளிகளில் (டேராடூன் பள்ளி போன்றவை) பயிற்சி முடித்து, ஒதுக்கப்பட்ட பதவிகளில் சேர்ந்து, படிப்படியாக துணைச் செயலாளர் தொடங்கி மேலே பதவி உயர்வு பெறுவார்கள்.

இந்த முறையை அறவே புறந்தள்ளி விட்டு திடீரென்று முப்பது பேரை தனியார் துறைகளிலிருந்து (நிபுணர்களாம் அவர்கள்!) மத்திய அரசே தேர்வு செய்து நேரடியாக எடுத்த எடுப்பில் கூட்டுச் செயலாளராக நியமித்து (பிறகு செயலாளராகவும் நிர்வாகத்தையே முழுதாக நடத்தும் நிலையும்கூட ஏற்படும்) விடுவது, நடுவில் ஊடுருவுவது என்பது அரசமைப்புச் சட்டப்படியும், நியாயப்படியும் ஏற்கத்தக்கதல்ல.

முந்தைய முறையான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நியமனங்களில் - சமூகநீதி - இட ஒதுக்கீடு முறை உண்டு. மண்டல் பரிந்துரை ஆணைகளாக்கப்பட்டு 1993 முதலே - அதற்கு முன்பே எஸ்.சி., எஸ்.டி., இவர்களுக்கு மத்திய அரசில் 22.5 சதவிகிதம் (15, 7.5)- 23 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்ற இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டது. இதுவரை வாய்ப்புக் கிட்டாத ஒடுக்கப்பட்டோர் நிர்வாகத்தில் பங்கு பெறும் வாய்ப்பு ஏற்பட்டது!

அவற்றைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் - ‘‘கண்டதே காட்சி கொண்டதே சட்டம்‘’ என்ற நிலையில், நாட்டில் நிர்வாகம் இப்படி அரசமைப்புச் சட்ட விதிகளையே புறந்தள்ளும் போக்கும் ஒரே கல்லில் தனக்கு வேண்டியவர்களாகவோ, தனது கட்சி, கொள்கை உணர்வாளர்களாகவோ அல்லது தனக்குத் தலையாட்டும் தம்பிரான்களையோ அத்தகைய ‘‘திடீர் நுழைப்பாளர்கள்’’ ஆவதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படாதா?
இதனை ஓய்வு பெற்ற முக்கிய பொறுப்பில் இருந்தவர்களான திரு.பாலச்சந்தர் அய்.ஏ.எஸ்., மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தனவேல் ஐஏஎஸ்., - மூத்த கனிந்த அனுபவம் வாய்ந்தோர் சுட்டிக்காட்டியுள்ளளனர்.

பதவியில் உள்ள மற்ற உறுப்பினர்களின் நியாய மான, பதவி உயர்வு உரிமையும்கூட இதன்மூலம் பறிக்கப்படும் சமூக அநீதியும் உள்ளடங்கியுள்ளது.

அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் பறிக்கப்படாமல் தடுக்கவேண்டியது அவசியம்!

எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மக்கள் தலைவர்களும், சமூகநீதிப் போராளிகளும் கண்டித்துக் குரல் எழுப்பி, அரசமைப்புச் சட்ட விழுமியங்களும், கொள்கைகளும் பறிக்கப்படாமல் தடுக்க முன்வரவேண்டியது அவசரம் - அவசியம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x