Published : 10 Nov 2015 11:02 AM
Last Updated : 10 Nov 2015 11:02 AM

மழையால் பலமணி நேரம் மின்தடை: பொதுமக்கள் அவதி

மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. பலபகுதிகளில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், வங்கக்கடலில் உருவா கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

நகரின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தடை பட்ட மின்சாரம் நேற்று முழுவதும் சீரடையவில்லை. தென்சென்னை யில் ஆலந்தூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்ததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியதும் மின் விநியோகம் சீரானது. தாம்பரத்தை ஒட்டிய சேலையூர், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பெரம்பூர், அயனாவரம், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபட்டது.

அஸ்தினாபுரம் அடுத்த நேருநகர் மின் விநியோக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் தடைபட்ட மின்சாரம் நேற்று மாலை வரையில் சீரடையவில்லை.

பல மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகினர்.

களையிழந்த தீபாவளி கொண்டாட்டம்

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே கொண்டாட்டங்கள் களை கட்ட ஆரம்பித்து விடும். குறிப்பாக தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் வரை கூட பட்டாசு வெடிக்கும் சத்தம் எங்கும் கேட்கவில்லை.

மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்தும் அவர்களால் பட்டாசு வெடிக்க முடியவில்லை. சென்னையில் பெய்த தொடர் மழையே இதற்குக் காரணம். இதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் களையிழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x