

கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டியில் நாளை தொடங்கவுள்ள சிறப்பு நல வாழ்வு முகாமில் பங்கேற்கச் செய்வதற்காக, திருச்சியில் இருந்து 4 கோயில் யானைகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள தேக்கம்பட்டியில், தமிழ்நாட்டில் உள்ள கோயில் மற்றும் மடங்கள் ஆகியவற்றில் உள்ள யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த முகாமில் யானைகளுக்கு பசுந் தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகள் வழங்கப்படும். தினமும் காலை, மாலை நடைப்பயிற்சி அளிக்கப்படும்.
யானைகளை ஆரோக்கியமாக பராமரிக்கும் நோக்கில் 2003-ல் இந்தத் திட்டத்தை அரசு தொடங்கியது. நிகழாண்டுக்கான யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நாளை (பிப்.8-ம் தேதி) தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலின் ஆண்டாள், லட்சுமி, திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயிலின் அகிலா, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி கோயிலின் லட்சுமி ஆகிய 4 யானைகள், இன்று தனித் தனி லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் இருந்து, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன் யானைகளை வழியனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி (ஸ்ரீரங்கம்), மாரியப்பன் (திருவானைக்காவல்), த.விஜயராணி (மலைக்கோட்டை) மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.