Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

கடும் நிதி நெருக்கடியிலும் பயிர்க் கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி: முதல்வரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் நன்றி

சென்னை

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்பெற்ற பயிர்க் கடன் நிலுவை ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்ததற்காக முதல்வர் பழனிசாமியை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் பழனிசாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் டெல்டா வி.சத்யநாராயணன், மாவட்ட தலைவர் என்.எச்.ஹாஜா மைதீன், தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் ஜி.சேதுராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் பயரி எஸ்.கிருஷ்ணமணி, திருவாரூர் மாவட்ட செயலாளர் செம்மங்குடி எம்.ராஜேந்திரன், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பி.விநாயகமூர்த்தி மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்தனர். கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன்: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய முழு கடனும் முதல்வரின் முயற்சியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. காப்பீடு நிவாரணம் என்று கொடுப்பார்களே தவிர, பயிர்க் கடனையே தள்ளுபடி செய்யும் அளவுக்கு கொடுத்தது இதுதான் முதல்முறை. நாட்டிலேயே இந்த முதல்வர்தான் விவசாயிகளுக்காக இந்த அளவுக்கு செய்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியிலும் எங்கள் கோரிக்கையை ஏற்று, தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று, ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து முதல்வர் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. சட்டத்துக்கு உட்பட்டு இந்த தள்ளுபடியை முதல்வர் அறிவித்துள்ளார். இயற்கை ஒத்துழைக்கும்போது மறு உற்பத்திக்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தள்ளுபடி மூலம் விவசாயிகளின் கடன்சுமையை அரசு ஒட்டு மொத்தமாக இறக்கி வைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x