

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்துவிடுதலை செய்யப்பட்ட சசிகலா நாளை (பிப்.8) தமிழகம் வருகிறார். அவரை வரவேற்கஅமமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிலர் வன்முறையில் ஈடுபடலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வகுப்பு, சமய, அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏதுமின்றி பொது அமைதியை நிலைநாட்டி சட்டம் ஒழுங்கை காவல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிறஅமைப்பினர் போல தங்களைப் பாவித்துக்கொண்டு, பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையில் எடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால், யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.