

பருவம் தவறி பெய்த மழையால் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி நின்று, விளைந்த நெற்பயிர்களை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். ஆனாலும், அடுத்த சிக்கலாக அறுவடை இயந்திரம் கிடைப்பதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர் விவசாயிகள்.
அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாட்டால், ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வரை வாடகை கேட்கின்றனர். பயிர் முதலீட்டைக் காட்டிலும் அறுவடைக்கான செலவு கூடுதலாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். அறுவடை இயந்திரத்துக்கு வாடகை கொடுத்து கட்டுப்படியாகாது என்பதால், பழைய முறைப்படி, விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி அறுவடை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி கடந்த 20-ம் தேதி, வாடகை இயந்திரம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையின் அடிப்படையில் மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,800 முதல் 2,100 வரை, டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு நிலத்தின் ஈரத்தன்மையின் அடிப்படையில் மணி ஒன்றுக்கு ரூ.1,300 முதல் 1,500 வரை வாடகை நிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
அரசு, இப்படி கட்டண முறை நிர்ணயம் செய் தாலும், வாடகைக்கு அறுவடைஇயந்திரத்தை இயக்குவோர், அறுவடையை மெதுவாக செய்து, நேரத்தை இரட்டிப் பாக்குவதாக புகார்கள் வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் அறுவடை இயந்திரங்களுக்குத் தேவை அதிகமிருப்பதை அறிந்த கர்நாடக, ஆந்திர மாநில பெரு விவசாயிகள், தங்களது அறுவடை இயந்திரங்களை கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கொண்டு வந்து முகாமிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தொடரும் இம்முறையால் அறுவடை தருணங்களில் பெருந்தொகை வெளி மாநிலங்களுக்குச் செல்கிறது.
“கடந்த சில ஆண்டுகளில் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த அடுத்த கட்ட நகர்வுக்கு நம் மாநிலம் செல்லாதது பல விதங்களில் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான உதாரணமே, இந்த அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாடு. இங்கிருக்கும் பெரு விவசாயிகளே கூடுதலாக இயந்திரங்களை இறக்கி, இதையே வேளாண் சார் தொழிலாக செய்யலாம். அதற்கு வங்கிக் கடனுதவி தரப்பட வேண்டும், வேளாண் துறையும் வருங்காலங்களில் அதற்கான சரியான வழிகாட்டுதலை தர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இப்பிரச்சினை தீரும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் இது பெரிய பிரச்சினையாக மாறி நிற்கும்’‘ என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட தலைவர் மாதவன்.
அடித்து பெய்த பெரு மழையால் ஆடிப்போயிருக்கின்றனர் நம் விவசாயிகள். ஆனாலும், ‘நடப்பாண்டில், நம் கடலூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி 2 லட்சம் மெட்ரிக் டன் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இந்த பெரும் விவசாயப் பரப்பிற்கு செய்ய வேண்டியது எண்ணற்றவை. அவற்றில் அவசர அவசியத் தேவையாக முன் வந்து நின்கின்றன இந்த அறுவடை இயந்திரங்கள்.
பெயர் அளவிற்கு விவசாயிகள் குறை தீர் கூட்டங்களைக் கூட்டுவதும், கூட்டங்களில் கலந்து கருத்துகளைச் சொல்வதையும் தாண்டி சரியான நேரத்தில் சரியானதை செய்ய நம் முன்னே எண்ணற்ற விஷயங்கள் கை கட்டி காத்திருக்கின்றன.
அரசை குறைச் சொல்வதைத் தாண்டி, இயற்கையோடு நவீனத்தையும் சேர்த்து கைகோர்த்து சென்று காலத்தின் தேவையை பூர்த்தி செய்வோம்; நம் தென்னாற்காடு மண்டலத்தை செழிக்கச் செய்வோம். 1 லட்சத்து 60 ஆயிரம்
மெட்ரிக் டன் நெல் உற்பத்தி
கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 96 ஆயிரம் ஹெக்டேரிலும், குறுவை பருவத்தில் 53 ஆயிரம் ஹெக்டேரிலும், நவரையில் 20 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், கடலூர் டெல்டா பாசனத்தை மட்டுமே நம்பி சம்பா பருவத்தில் 50 ஆயிரம் ஹெக்டேரிலும், குறுவை பருவத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.