

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டம் ஆக இருந்தபோது சிதம்பரத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள அடித்தட்டு ஏழை மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என கருதி கல்வி நிறுவனங்களையும் நிறுவி பல்லாயிரக்கணக்கான ஏழை பட்டதாரிகளை உருவாக்கியவர் சுவாமி சகஜானந்தா.
சுவாமி சனஜானந்தா ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் பிறந்தார் (1890). பட்டியல் இனத்தில் பிறந்த இவரது இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் இருந்தது. சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்தார்.
திண்டிவனம் அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒரு சில மாதங்களிலேயே பைபிளை மனப்பாடமாக ஒப்பித்தார். பள்ளி நிர்வாகம் ‘சிகாமணி’ பட்டம் வழங்கியது. சில நிபந்தனைகளின் பேரில் படிப்புக்காக அமெரிக்கா அனுப்புவதாகக் கூறியது நிர்வாகம். அவர், அதை மறுக்கவே 8-ம் வகுப்பில் பாதியிலேயே பள்ளியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
குடும்ப வறுமையால் படிப்பை விட்டுவிட்டு, பெற்றோருடன் கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலுக்குச் சென்று கூலி வேலை செய்யத் தொடங்கினார். பல ஆன்மிக நூல்களைக் கற்றார். மாலை வேளைகளில் நீலமேக சுவாமிகள் என்பவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டார்.அவருடன் பல கோயில்களுக்குச் சென்றார். ஆனாலும் ஆலயத்துக்குள் நுழைந்து தெய்வ தரிசனம் செய்ய இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அங்கிருந்து காஞ்சிபுரம் வந்து தட்சிண ஸ்வாமி என்பவரிடம் பல ஆன்மிக விஷயங்களைக் கற்றார்.
பின்னர், வியாசர்பாடியில் இருந்த கரப்பாத்திர சுவாமிகளின் குருகுலத்தில் சேர்ந்தார். அவரே தன் சீடருக்கு (முனுசாமிக்கு) ‘சுவாமி சகஜானந்தர் என்ற பெயரை சூட்டினார். 1910ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக சிதம்பரத்துக்கு இவரை குரு அனுப்பி வைத்தார். சமூக நலனில் அக்கறை கொண்ட அனைத்து சமூக மக்களும் இவருக்கு உதவினர். பணமாகவும், நிலமாகவும் தானம் வழங்கினர்.
1911-ல் தமது மடத்திலேயே மூன்று மாணவர்களைக் கொண்டு ஒரு திண்ணைப் பள்ளியை தொடங்கி, தம் சமுதாயத்தின் தலை எழுத்தை மாற்றி எழுத தொடங்கினார். 1916-ம் ஆண்டு நந்தனார் கல்விக் கழகத்தைத் தொடங்கினார். இலங்கை, பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் சென்று உரையாற்றி நிதி திரட்டினார்.
1929-ல் மாணவர் இல்லம், 1930-ல் மாணவியர் விடுதியையும் தொடங்கினார். அப்படி தொடங்கப்பட்ட பள்ளி தற்போது நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்தனார் அரசு பெண்கள் பள்ளி, அரசு நந்தனார் தொழில்கல்வி நிலையம் ஆகியவையாக பல்கி பெருகியுள்ளது.
இந்தப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பல்லாயிரக்கணக்காவர்கள் படித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ளனர்.
தனது சமூக மக்களின் நலனுக்காக அரசியலிலும் ஈடுபட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஏறக்குறைய 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்றுத் தந்தார்.
இவரது அயராத முனைப்பாலும் மற்றும் பலரது போராட்டங்களாலும் 1947-ல் அனைவரும் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு எதிரே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 27-ம் தேதி சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.