

அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 15 செமீ மழை பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 14, தூத்துக்குடியில் 13, திண்டுக்கல்லில் 12, மதுரையில் 11, சிவகங்கையில் 9, கோவை, நாமக்கல்லில் 8, திருவாரூர் மற்றும் நெல்லையில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கிழக்கு மத்திய அரபிக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது. இதன் காரணமாக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்திற்கு அதிகளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் மழை தொடர்ந்து வருகிறது.
அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 8-ம் தேதிவரை, கடலோர மாவட்டங்களின் பெரும்பாலாலான பகுதிகள் மற்றும் உள்மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான 9-ம் தேதி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் கனமழை அல்லது அதிகனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.