

‘‘மத்திய பட்ஜெட்டில் கூறியது எல்லாம் பொய். யாருக்கும் பயனில்லாத மோசடி பட்ஜெட்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினர்.
அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் 9 ஆண்டுகள் தூங்கிக் கொண்டு இருந்த அதிமுக அரசு கடைசி நேரத்தில் திடீர், திடீரென திட்டங்களை அறிவித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டத்திற்கு ஒரு ரூபாய் ஒதுக்க முடியாது.
அதேபோல் மத்திய பட்ஜெட்டில் தமிழகம், கேரளாவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாயில் சாலைப் பணிகளை நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் அவை பட்ஜெட் ஆவணத்திலேயே இல்லை.
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை உயர்த்த போவது யாருக்குமே தெரியாது. ஏன் எம்.பி.,களுக்கே தெரியாது. பெட்ரோல், டீசல் விலை உயராது என நிதியமைச்சர் கூறினார். ஆனால் 8 நாட்கள் கூட ஆகவில்லை.
விலை உயர்ந்துவிட்டது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்களுக்கு பயன் இல்லை. தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர். அலுவலக மேலாளர்கள் 34 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்தப் பயனும் இல்லை.
இதனால் பெரிய முதலாளிகள் மட்டுமே பயனடைந்துள்ளனர். எந்த முதலாளிக்கு பயன்பெறுவதற்காக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குகின்றனர்.
கூலித் தொழிலாளிகளில் இருந்து குடிசை தொழில்கள் செய்வோர்வரை யாருக்குமே பயன் பெறாத ஒரு மோசடி பட்ஜெட். பட்ஜெட்டில் கூறியது எல்லாம் பொய். முதலாளிகள்தான் இந்த பட்ஜெட்டை புகழ்கின்றனர்.
அமெரிக்க நாட்டில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 1,400 டாலர் அரசு அளிக்கிறது. அதேபோல் இந்தியாவில் குறைந்தது ரூ.5 ஆயிரமாவது கொடுங்கல் என்று கூறினோம். ஆனால் கண்டுகொள்ளவில்லை. ஏழைகளிடம் பணம் போய் சேர்ந்தால் தான் பொருளாதாரம் பிழைக்கும்.
குறைந்தபட்ச ஆதார விலை, கொள்முதல், ரேஷன்கடை ஆகிய மூன்று தூண்கள் இருப்பதால் தான் பட்டினி கிடையாது. இந்த மூன்று தூணை அசைத்து பார்க்கிறார் மோடி, என்று கூறினார். எம்எல்ஏ ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.