Published : 06 Feb 2021 07:43 PM
Last Updated : 06 Feb 2021 07:43 PM

பதற்றத்தில் இருப்போர் எந்த பாதகத்தையும் செய்வர்; கவனமுடன் அமைதிகாத்து சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்போம்: டிடிவி.தினகரன்

சென்னை

யாரால் அமைச்சர் பதவியிலிருக்கிறோம் என்பதையே பட்டவர்த்தனமாக மறந்துவிட்டு, எதிர்க்கட்சியினர் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளில் சசிகலா மீது புழுதிவாரி தூற்றி, அதன் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே இழிவுப்படுத்துகிறார்கள், என அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

சசிகலா 8-ம் தேதி சென்னை வருவதையொட்டி அவரை வரவேற்க போலீஸ் அனுமதி அளித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வரவேற்பை அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம் வருமாறு:

“தமிழக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் தாயாக, தோழியாக இருந்து தன் வாழ்வையே அர்ப்பணித்த சசிகலாவை வரவேற்க, விழாக்கோலம் பூண்டு நீங்கள் செய்து வரும் ஏற்பாடுகளைப் பற்றிய செய்திகள் எல்லா ஊர்களில் இருந்தும் வந்தவண்ணம் இருக்கின்றன.

தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக நடைபெறும் இந்த வரவேற்பு ஏற்பாடுகளைப் பார்த்து பதற்றமடைந்திருக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர், என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்களே மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று இவர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால், திட்டமிட்டு எதாவது செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் மீது பழியைப் போடுவதற்கு சதித்திட்டம் தீட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது.

உள்ளார்ந்த அன்போடு ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் உணர்வு ரீதியில் காட்டும் பாசமெல்லாம், கூலிக்கு ஆட்களைத் திரட்டும் இவர்களுக்குப் புரியாது.

அதனால்தான் யாரால் அமைச்சர் பதவியிலிருக்கிறோம் என்பதையே பட்டவர்த்தனமாக மறந்துவிட்டு, எதிர்க்கட்சியினர் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளில் சசிகலா மீது புழுதிவாரி தூற்றி, அதன் மூலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே இழிவுப்படுத்துகிறார்கள். நான் பேசியதையும் திரித்து கூறி, நிதானமிழந்து அவதூறு செய்கிறார்கள்.

பதற்றத்தில் இருக்கும் இவர்கள் எத்தகைய பாதகத்தையும் செய்திட துணிந்தவர்கள் என்பதால், சசிகலா நாம் அளிக்கும் வரவேற்பை மிகுந்த கவனத்தோடு அமைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை ராணுவக் கட்டுப்பாட்டோடு சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திட வேண்டும்.

போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். கரோனா தடுப்பு விதிமுறைகளையும் முறைப்படி கடைபிடித்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு நாம் அளிக்கும் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சசிகலா தமிழகம் வருகிற நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ந்து கொண்டாடுகிற நாளாக மாற்றிடுவோம்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் எதிரியான தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்கிற பணியை முழு உத்வேகத்தோடு முன்னெடுத்திடுவோம்”.

இவ்வாறு தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x