

விவசாயிகளின் துயரத்தைப் போக்க தன் 22 ஏக்கர் நிலத்தை மட்டுமன்றித் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் மறைந்த குமுடிமூலை ராமானுஜம் என்று கடலூர் மாவட்ட விவசாயிகள் புகழாரம் சூட்டினர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர், சாமி.இராமானுஜம். குறிஞ்சிப்பாடி வட்டார கிராமப் பொதுமக்களால் எம்.ஏ., என அன்பாக அழைக்கப்பட்ட சாமி.ராமானுஜம், நேற்று (5-ம்தேதி) வெள்ளிக்கிழமை காலை சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது மகள் வீட்டில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.
இவர், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவணாற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற முக்கியப் பங்காற்றியவர். இவரது தன்னலமற்ற பணியால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் தற்போது வேளாண் பணிகள் சீராக நடந்து வருகின்றன.
மறைந்த சாமி.ராமானுஜம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஐஎன்டியுசி., தொழிற்சங்க முன்னாள் செயலாளர், உழைப்பாளர் பொதுநலக் கட்சி மாவட்டச் செயலாளர் எனப் பல பதவிகளை வகித்தவர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுப் பாசன விவசாயிகள் நலச் சங்கம், வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நலச் சங்கம், ஆகிய சங்கங்களை நிறுவிய சாமி.ராமானுஜம், அதன் செயலாளராக விவசாய நலன் சார்ந்த பொதுப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வந்தவர்.
இந்நிலையில் நேற்று காலை சென்னையில் இயற்கை எய்தினார். அவரது சொந்த ஊரான குமுடிமூலையில் இன்று (சனிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் கடலுார் மாவட்ட வேளாண்துறை கூடுதல் இயக்குநர், ரமேஷ், பெருமாள் ஏரி விவசாயச் சங்கத் தலைவர் சண்முகம், பிஜேபி விவசாய அணி நிர்வாகி மல்லிய தாஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ராமானுஜம் குறித்து குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
''குமுடிமூலை ராமானுஜத்தை, எம்.ஏ., என்றே விவசாயிகள் அனைவரும் அழைப்போம். அந்தக் காலத்திலேயே எம்.ஏ., பட்டப்படிப்பு படித்த அவர், விவசாயிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார். நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நீர் வெளியேறும் பரவணாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில், அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகும்.
இதனால் மகசூல் பெருமளவில் பாழடையும். தற்போது அணை கட்டியுள்ளதால் வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல, சமீபத்தில் குமுடிமூலை, கொத்தவாச்சேரி உள்ளிட்ட பல ஏரிகளில், நெய்வேலி, என்.எல்.சி. நிறுவனம் சார்பில் தூர்வாரிப் புனரமைக்கப்பட்டன. அனைத்து விவசாயப் பொது சேவைகள் தொடர்பாக, எம்.ஏ., தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.
இதற்காக அவர் தனக்குச் சொந்தமான 22 ஏக்கர் விவசாய நிலங்களை விற்று, அனைத்து விவசாயம் சார்ந்த பொது வேலைகளையும் முன்னின்று செய்தார். கடலூர் முன்னாள் மாவட்ட ஆட்சியரும், தற்போதைய வேளாண் செயலருமான ககன்தீப் சிங் பேடி, எம்.ஏ.வின் ஆலோசனைகளைக் கேட்டு பரவணாறு பணிகளை மேற்கொண்டார். கடலுார் மாவட்ட வேளாண் அதிகாரிகள் பலரும் ராமானுஜத்தின் பொதுச் சேவையை நன்கு அறிவர்.
தள்ளாத வயதிலும், தொலைபேசியில் அனைத்து வேளாண் அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் தொடர்பு கொண்டு பணிகளை முடுக்கி விடுவார். விவசாயிகளை மட்டுமல்ல, விவசாயிகளின் குடும்பத்தினரையும் தெரிந்து வைத்திருப்பார்''.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.