

தான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர்கள் ஒருசிலர் பேசி வருவதாக, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து ஜன.27 அன்று விடுதலையான சசிகலா கரோனா தொற்று காரணமாக ஓய்வுக்குப்பின் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய ப்ராடோ காரை பயன்படுத்தினார். அதில், அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அதிலென்ன தவறு, அவர் அதிமுக பொதுச் செயலாளர்தானே, இன்னும் அதிமுகவில்தானே உள்ளார் என்று பதில் கேள்வி எழுப்பினார்.
சசிகலா அதிமுகவை மீட்க சட்டப்போராட்டம் நடத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சசிகலா அதிமுகவில் இல்லை, அவர்களை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக தலைவர்கள் கூறிவருகின்றனர். சசிகலா சென்னை திரும்பும் நிலையில் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என டிஜிபியிடம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.
இது குறித்து, பதிலளித்த டிடிவி தினகரன், டிஜிபி, கமிஷனர் முப்படை தளபதிகளிடம் புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது என்று தெரிவித்தார். இந்நிலையில், சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையிலேயே ஒட்டியுள்ளனர்.
சசிகலா வருகையை ஒட்டிய சூழ்நிலையை எதிர்க்கொள்ள இன்று (பிப். 06) மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இன்று மீண்டும் டிஜிபியை சந்தித்து புகார் அளித்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், தமிழகத்தில் கலவரம் செய்ய சசிகலா, டிடிவி தினகரன், அவரது ஆட்கள் முடிவு செய்து பேட்டி அளிக்கிறார்கள், அவர்கள் பழியை அதிமுக மீது போட திட்டமிட்டுள்ளனர், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம் என, தெரிவித்தார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "சசிகலாவை வரவேற்க ஜெயலலிதாவின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை.
நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார்கள்.
அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும், டிஜிபியிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய் புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மேலும், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சசிகலாவால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள்.
இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.