Published : 18 Nov 2015 10:32 AM
Last Updated : 18 Nov 2015 10:32 AM

ராமகிருஷ்ண மடம் சார்பில் கடலூர், சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகள்

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் கடலூர் மாவட்டம், சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் பெய்த மழையால் கடலூர் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டன. அம்மாவட்டத்தில் கடலூர் வட்டத்தைச் சேர்ந்த வண்டிப்பாளையம், பீமா நகர், குயவன்பாளையம், கடலூர் பழைய டவுன், காட்டாம்புலியூர் வட்டத்தைச் சேர்ந்த மேல்இருப்பு, நெய்வேலி வட்டம் நரிக்குறவர் காலனி (பெரியாக்குறிச்சி), குறிஞ்சிப்பாடி மற்றும் அந்த தாலுகாவைச் சேர்ந்த கண்ணுத்தோப்பு, ராசா பாளையம் (சமத்துவபுரம்) ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

அப்பகுதிகளைச் சேர்ந்த 1,500 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு, 2 புடவைகள், 2 லுங்கிகள், டவல், போர்வை, பாய் போன்றவையும் அத்துடன் 400 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

சென்னையில் மிகவும் பாதிக்கப்பட்ட எண்ணூரில் ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம் சார்பில் கடந்த 3 தினங்களாக சுமார் 9,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று சுமார் 5,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் மணலி பகுதியில் நேற்றுமுன்தினமும், பட்டினப் பாக்கத்தில் நேற்றும் சுமார் 850 பேருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்து மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

தொடர்ந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் என ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x