சிறுமியின் உயிரை காப்பாற்றிய பப்பாளி இலைச்சாறு: சித்த மருத்துவ அலுவலர் தகவல்

சிறுமியின் உயிரை காப்பாற்றிய பப்பாளி இலைச்சாறு: சித்த மருத்துவ அலுவலர் தகவல்
Updated on
1 min read

`தென்காசியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிரை பப்பாளி இலைச்சாறு காப்பாற்றியது’ என, திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் நேற்று நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாணிக்கதாய் கூறினார்.

அவர் பேசியதாவது:

மழைக்காலத்தில் கொசுக்கள், ஈக்கள் மூலம் அதிகளவில் நோய்கள் பரவுகின்றன. சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருப்பதுதான் நோய்கள் உருவாக முக்கிய காரணம். ஒவ்வொருவரும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், டெங்கு காய்ச்சலை விரட்டவும் நிலவேம்பு குடிநீர் உதவுகிறது. நிலவேம்பு குடிநீரில் 9 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த குடிநீரை தயாரித்த 3 மணிநேரத்துக்குள் அருந்த வேண்டும்.

பப்பாளி இலைச்சாறு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. அவ்வாறு பிளேட்லெட் அளவு குறைந்தால் பப்பாளி இலையை சாறாக தயாரித்து 10 மில்லி அளவு குடிக்க வேண்டும். பிளேட்லெட் 10 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்திருந்தால், நாள் ஒன்றுக்கு 4 முறை பப்பாளி இலை சாறு பருகலாம். பிளேட்லெட் 50 ஆயிரமாக இருந்தால் 2 முறை பருகலாம்.

சமீபத்தில் தென்காசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு பிளேட்லெட் அளவு 18 ஆயிரமாக குறைந்தது. அந்த சிறுமிக்கு பப்பாளி இலைச்சாறு முறைப்படி கொடுத்ததால் பிளேட்லெட் அளவை 1.5 லட்சமாக உயர்த்தி உயிரை காப்பாற்றியுள்ளோம்’ என்றார் அவர்.

மாவட்ட அறிவியல் மைய அலுவலர் நவராம்குமார் தலைமை வகித்தார். அறிவியல் மைய கல்வி அலுவலர் பொன்னரசு நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in