

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை மற்றும் இலக்கியப் பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் சென்னையில் வியாழக் கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் மொழியை நன்கு கற்றால், பிற மொழிகளை ஆறே மாதத்தில் கற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலம் போன்ற பிற மொழி களைப் படிப்பதில் தவறில்லை. ஆனால், கல்வி நிலையங்களில் தாய்மொழியான தமிழ் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் வரும் 8-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளேன். அப்போது என்னை வாழ்த்திப் பேசுவதற்கு வருவோர் மாலை, சால்வைகள் அணிவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக திருக்குறள் புத்தகம், மகாத்மா காந்தியின் சத்தியசோதனை போன்ற புத்தகங்களைத் தாருங் கள். அந்தப் புத்தகங்கள், குடிசைக ளில் வாழும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்க அனுமதி கோரி நான் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றேன். அதையடுத்து நாடாளுமன்றத்தில் 1978-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தமிழில் நான் முதல் கேள்வியைக் கேட்டேன். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்கள் தமிழில் கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் கேள்வி கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் மொழியை மேலும் மேம்படுத்த, தமிழ் வழியில் படிப் பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தர வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.