Published : 06 Feb 2021 12:38 PM
Last Updated : 06 Feb 2021 12:38 PM

ராமேசுவரத்தில் ஒரு சாதனை முயற்சி: பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் ஹீலியம் பலூன் மூலம் வானில் செலுத்தப்படுகிறது

ராமேசுவரம்

இந்தியா முழுவதுமிலிருந்து பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் உலக சாதனை முயற்சியாக நாளை (பிப்.7) அன்று ராமேசுவரத்திலிருந்து வானில் செலுத்தப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல்கலாம் நினைவாக ராமேசுவரத்தில் இருந்து சாதனை முயற்சியாக இந்தியா முழுவதுமிலிருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய அளவிலான 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் பிப்ரவரி 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலிருந்து ராட்சத ஹீலியம் பலூன் மூலமாக வானத்தில் செலுத்தப்படவுள்ளன.

ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து இந்திய பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தி கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சியைக் கடந்த ஆண்டு தொடங்கினர்.

இது குறித்து ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் நிறுவனரான அப்துல் கலாமின் பேரான் ஷேக் சலிம் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

பள்ளி மாணவர்கள் மத்தியில் செயற்கைக்கோள் தயாரிப்பு, விண்வெளி துறையில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு முயற்சிககளை அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கினோம்.

இதற்காக இந்தியா முழுவதுமிலிருந்து 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தலா 10 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவாக 100 குழுவினருக்கு ஆன் லைன் மூலம் கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்களின் (Femto satellite) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கினோம். இந்த மாணவர்கள் தயாரித்த ஒவ்வொரு செயற்கைகோளும் 40 கிராம் முதல் அதிகப்பட்சமா 50 கிராம் வரையிலும் எடை கொண்டது.

ராமேசுவரத்தில் உள்ள தனியார் மைதானத்தில் பிப்ரவரி 7 ஞாயிற்றுக்கிழமை காலை ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களையும் ஒரே நேரத்தில் வானத்தில் செலுத்த உள்ளோம். இந்த ராட்சத ஹீலியம் பலூன் கயிறு மூலம் கட்டப்பட்டு சுமார் 8 ஆயிரம் மீட்டர் உயரம் வரையிலும் செலுத்தப்படும்.

8 ஆயிரம் மீட்டர் உயரம் பலூன் சென்றடைந்ததும் அதனை கீழே கொண்டு வந்து செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட ஓசோன் படலம், கதிர்வீச்சு, விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 மாணவர்கள் வரையிலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து கொள்ள உள்ளனர், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x