

கூட்டுறவு பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ள டெல்டாமாவட்ட விவசாயிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றகடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு கூறியது: தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்கிறோம். 2016-ம் ஆண்டில் சிறு, குறு விவசாயிகளின் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து அறிவித்தது. இந்த தள்ளுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையும் தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்க மாவட்ட துணைச் செயலாளர் கவண்டம்பட்டி சுப்பிரமணியன் கூறியது: தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். விவசாயம் சார்ந்த அனைத்துக் கடன்களையும், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றார்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் கூறியது: தமிழக அரசு ஆளுங்கட்சிக்காரர்களுக்கு அதிக அளவில்பயிர்க் கடன் அளித்து விட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தேர்தல் உள்நோக்கத்துடன் இந்த கடன் தள்ளுபடியை அறிவித்துள் ளது என்று தான் கருதுகிறோம் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியது:
விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேசமயம், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். இயற்கை பாதிப்பு, இழப்பு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவானது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறியது: தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயகடனில், 20 சதவீதம் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். மீதமுள்ள 80 சதவீதம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கியிலும் கடன் பெற்றுள்ளனர். எனவே, அனைத்து விவசாயிகளும் பயன் அடையும் வகையில், இதர வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என பாகுபாடு காட்டாமல் கடன் தள்ளுபடியை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்தது போல மற்ற வங்கிகளில் பெறப்பட்ட கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி. இளங்கீரன் கூறியது: தமிழக முதல்வரின் கடன்தள்ளுபடி அறிவிப்பை வரவேற்கிறோம். தற்போது தேர்தல் வரவுள்ளதால், விவசாயிகளின் மீது அக்கறை உள்ளது போன்று தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் போதுமான நிதி இல்லாததால் இவற்றில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் 10 சதவீதம் பேர்தான். மற்ற விவசாயிகள் சாகுபடிக்காக அடங்கல் கொடுத்து நகைக்கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடன்கள் தள்ளுபடி உண்டா என்ற விவரம் தெரியவில்லை. அதேபோல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.