

மேற்கு தாம்பரம் பகுதியில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், பர்மா காலனிப் பகுதியில் திருநீர்மலை செல்லும் சாலையில் மெட்ரோ குடிநீர் வாரியம் மூலம் பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 15 அடி ஆழம் பள்ளம்தோண்டப்பட்டு, அந்தப் பள்ளத்தில் கூலித் தொழிலாளர்கள் 8 பேர்வேலை செய்து வந்தனர். அப்போதுஇரும்பு குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட அதிர்வில் மண் திடீரென சரிந்தது.
இதையடுத்து பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த திருவெற்றியூரைச் சேர்ந்த சேகர் (28), மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பாரதி (21) ஆகியோர் பள்ளத்தில் சரிந்த மண்ணில் சிக்கிக் கொண்டனர். உடனே, சக ஊழியர்கள் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அரை மணி நேரம் போராடி இருவரையும் மீட்டனர். இவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருவரையும் மருத்துவர்கள் பரிசோதித்தபோது சேகர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. பாரதிக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாதாள சாக்கடை கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் வாசுதேவரெட்டி, துணை ஒப்பந்ததாரர் டில்லி ராஜா, மேலாளர் சுனந்தகுமார், பொக்லைன் ஓட்டுநர் வினோத் ஆகியோரை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
இதுபோல் பணி செய்யும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும், பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.