

காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது. மேலும்நேற்று காலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு நடவடிக்கையில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் திருமுக்கூடல் அருகே உள்ள மதூர் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் வெட்டியெடுக்கப்பட்ட மண்ணை, குவாரியின் கரைக்கு மேல் கொட்டிவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்குவிக்கப்பட்டிருந்த மண் சரிந்து விழுந்தது. குவாரியின் ஓரத்தில் இருந்த கற்களும் உடைந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கியவாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்கிற தொழிலாளர் உயிரிழந்தார்.
மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனு அன்சாரி(25) என்பவர் பலத்த காயமடைந்ததால் அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.
உடலை வாங்க மறுப்பு
மண் சரிவில் உயிரிழந்த மணிகண்டனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்று, தற்போது அவரது மனைவிஅபிராமி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கல்குவாரியில் பணி புரிந்த மணிகண்டனுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால்தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறியும், அரசு சார்பில் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மணிகண்டனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருமுக்கூடல் - மதூர் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் சரத், மேற்பார்வையாளர் சுரேஷ், தொழிலாளர் ஒப்பந்ததாரர் வேலு ஆகிய 3 பேர் மீது, சாலவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்குவாரி பகுதிகளில் அதிவேகத்தில் லாரிகள் செல்வது, உரிய பாதுகாப்பு இன்றி அதிக ஆழத்துக்கு குவாரியை தோண்டுவது உள்ளிட்டவற்றை அரசு கட்டுபடுத்தவில்லை என்றும்,கல்குவாரி விதிமீறல்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமோ, தொடர்புடைய காவல் நிலைய போலீஸாரோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மீண்டும் மண் சரிவு
கல் குவாரியில் மண் சரிந்த இடத்தில் நேற்று காலை மீண்டும்மண் சரிவு ஏற்பட்டது. இதனால்உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குவாரியின் கரை மேல் கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்தி, பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
போலீஸ் மோப்ப நாய் மூலம் மண் சரிவு இடத்தில் வேறு ஏதேனும் உடல் உள்ளதா என்றும் ஆய்வுசெய்தனர். இதையடுத்து மண்சரிவில் வேறு எவரும் சிக்கியிருக்கவாய்ப்பு இல்லை என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் மீட்பு படையினரின் ஆய்வில் மண் சரிவில் லாரிஒன்று சிக்கியுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து வெளியான டீசல் தீப்பற்றியதில் அருகில் இருந்த டிராக்டர் ஒன்றுதீப்பிடித்து எரிந்தது. பற்றியெரிந்த டிராக்டரை மீட்பு படையினர் மீட்க நடவடிக்கை எடுத்தனர்.