Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்

வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையும் முதல்வரின் தேர்தல் பிரச்சாரமும் ஒரே நாளில் அமைந்ததால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வித மாக, முதல்வரின் தேர்தல் பிரச் சாரம் வரும் 9-ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.

பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வேலூர் மாவட்டம் வழியாக சென்னை திரும்பவுள் ளார். வழிநெடுகிலும் அவரை வரவேற்க அமமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சசிகலாவால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேநேரம், தமிழக சட்டப் பேரவை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் முதல்வர் பழனிசாமி மாவட்டந்தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் பிப்.10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அதிமுகவினர் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்பதால், அவரை வரவேற்கவும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளையும் அதிமுக நிர்வாகிகள் செய்து வந்தனர்.

இதற்கிடையில், பெங்களூரு வில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, பிப்.7-ல் சென்னை திரும்பும் தகவலால் முதல்வரின் பிரச்சார தேதியில் மாற்றம் செய்யப்பட்டு பிப்.8 மற்றும் 9-ம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், திருப் பத்தூர் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் வேக வேகமாக இறுதி செய்தனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சசிகலாவின் வருகை 7-ம் தேதிக்கு பதிலாக 8-ம் தேதி என மாற்றப்பட்டதால் அமமுகவினர் மட்டுமில்லாது அதிமுகவினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையும், வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சாரமும் ஒரே நாளில் நடைபெறுகிறது என்ற தகவல் இரண்டு கட்சியினர் மத்தியிலும் சலசலப்பு தொற்றிக்கொண்டது.

வேலூர் மாவட்டத்தில் முதல் வரின் பிரச்சாரமும் சசிகலா வருகையும் காவல் துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில். முதல்வரின் பிரச்சார தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. தேவையில்லாத சங்கடங்களை தவிர்க்கலாம் என உளவுத்துறை தரப்பில் இருந்து முதல்வர் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்பார்த்தபடி முதல்வரின் பிரச்சார தேதியில் மாற்றம் செய்து 8-ம் தேதிக்குப் பதிலாக வரும் 9-ம் தேதி என இறுதி செய்யப்பட்டு அதிமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த அதிமுக நிர்வாகி கள் முதல்வரை வரவேற்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரம் 8-ம் தேதி என தெரிந்தும் சசிகலா வருகைக்கான தேதி திட்டமிட்டு மாற்றப்பட்டது. இரண்டு கட்சி களின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் சர்ச்சையும் ஏற்படக் கூடாது என்பதை முதல்வரும் விரும்புகிறார். இதற்காக, சசிகலா வருகைக்கு முதல்வர் வழிவிட் டுள்ளார். இதற்கு, மேலும் அவர்கள்தேதி மாற்றாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 8-ம் தேதி ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் வரும் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல் களில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x