

"கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் எந்த முகத்தைக் (நமச்சிவாயம்) காட்டி வெற்றி பெற்றதோ, அம்முகத்தையே காட்டி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.
அவர்களைப் போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் சூசகமாக முதல்வர் வேட்பாளரைத் தெரிவித்தார்,
புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த நமச்சிவாயம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் வென்றது. முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நமச்சிவாயத்துக்குப் பதில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். நாராயணசாமியுடன் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயம் பாஜகவில் தற்போது இணைந்துள்ளார்.
அவர் கட்சியில் இணைந்தபிறகு முதல் முறையாகப் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஏஎஃப்டி மைதானத்தில் இன்று நடந்தது.
மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசுகையில், "முதல்வர் நாராயணசாமி ஒரு நம்பிக்கைத் துரோகி. காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடந்த 50 ஆண்டுகளாக, முதல்வராக இருந்த ஃபரூக், சண்முகம், வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் மத்தியில் நாங்கள் உள்ளோம்.
உங்களுக்கு எல்லாம் வேண்டுமென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியே புதுவையில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார்கள். அவர்கள் கூறியதைதான் நாங்கள் இன்று சொல்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி வரவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எந்த முகத்தைக் காட்டி காங்கிரஸ் வென்றதோ அம்முகத்தையே காட்டி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.
அவர்களைப் போல் நாங்கள் ஏமாற்ற மாட்டோம். காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு மட்டும் அல்ல தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
இந்தியாவின் கடைசி காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங். அதேபோல், புதுவையில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வராக நாராயணசாமி இருப்பார். இனி வரப்போகும் அனைத்து முதல்வர்களும் பாஜகவினராகத்தான் இருப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசும்போது, "முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை அரகேற்றிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் வரும் நேரத்தில் எங்களை எல்லாம் தெருவில் உட்கார வைத்த பெருமை முதல்வரையே சேரும். சட்டப்பேரவையைக்கூட நடுரோட்டில் நடத்திய பெருமை அவரையே சாரும். அன்று எங்களை நடுத்தெருவில் நிற்க வைத்தார். அதேபோல் இன்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை நடுத்தெருவில் உட்கார வைத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் ஆளுநரை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் வெற்றி பெறலாம் என்று ஏமாற்றுவதற்காக இந்த நாடகத்தை ஆடுகிறார்.
இதனை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை. பாஜகவைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். புதுவை மக்களுக்கு ஆளுநர், முதல்வர் என யார் எத்தகைய இடையூறு செய்தாலும் அதனை எதிர்ப்பதற்குத் தயாராக உள்ளோம். 2021-ல் பாஜக ஆட்சி மலரும்போது, புதுவை ஒளிரும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, நியமன எம்எல்ஏக்கள் செல்வகணபதி, தங்க.விக்ரமன், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பங்கேற்றனர்.