

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மத்திய குழுவினர் வந்ததுமே புறப்பட்டுச் சென்றதால் பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியாமல் வேதனை அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரியில் பெய்த தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்தன.
இதில் 36,031 எக்டேரில் நெற்பயிர்கள், வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் 91 எக்டேரிலும் சேதமடைந்தன. இதன்மூலம் 57,853 விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான குழு நேற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய குழுவை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்க காலை 9 மணிக்கே தேவகோட்டை அருகே கற்களத்தூர் கிராமத்தில் விவசாயிகள் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். ஆனால் அக்குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளை பார்வையிட்டதால், மதியம் 2.10 மணிக்கே கற்களத்தூருக்கு வந்தது.
அக்குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
மதிய உணவு நேரம் என்பதால் மத்திய குழு ஒரு விவசாய நிலத்தை மட்டும் பார்வையிட்டு சில நிமிடங்களிலேயே அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சிவகங்கை சென்றது. இதனால் பல மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமல் வேதனை அடைந்தனர்.
மேலும் அக்குழு சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடி பகுதியில் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ நான்கு ஆண்டுகளாக மழையில்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டோம். இந்தாண்டு அதிகளவுக்கு அதிகமாக மழை பெய்ததால் பாதிக்கப்பட்டோம். நாங்கள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம்.
ஆனால் மாநில அரசு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே அறிவித்துள்ளது. மத்திய குழுவிடம் குறைகளை தெரிவித்தால் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எங்களது வேதனையை கேட்காமலேயே சென்றுவிட்டது, என்று கூறினர்.