

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் போலீஸாரைத் தாக்கியது, தீ வைத்தது போன்ற வன்முறை சார்ந்த வழக்குகள் தவிர பிற வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து 2017-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய போராட்டத்தில் ஆரம்பத்தில் 50 பேர் திரண்ட நிலையில் பின்னர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். பிறகு இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
மெரினா புரட்சி என்று அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. ஜன.23 வரை இப்போராட்டம் நீடித்தது. போராட்டத்தின் வீச்சைக் கண்ட தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி உடனடியாக அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது.
இதையடுத்துப் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து செல்லுமாறு காவல்துறை வேண்டுகோள் வைத்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் கலைந்து செல்ல, ஒருசாரர் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், எழும்பூர் எனப் பரவியது.
ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதேபோன்று தமிழகத்தின் பிற இடங்களிலும் போராட்டத்தில் ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது.
33 போலீஸார் உட்பட பொதுமக்கள் 60 பேர் காயம் அடைந்தனர். வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். இதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. தற்போது இந்தப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் பழனிசாமி பேரவையில் இன்று அறிவித்தார்.
இது தொடர்பான முதல்வரின் அறிவிப்பு:
“ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான போராட்டம் ஆகும். இந்தப் போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர். இந்தப் போராட்டங்களின்போது சட்டம்-ஒழுங்கைப் பராமரித்திட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், போராட்டங்களின்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டன.
இந்த வழக்குகளில் உணர்வுபூர்வமாகப் போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களின்போது பதியப்பட்ட வழக்குகளில் காவலர்களைத் தாக்கியது, தீயிட்டுக் கொளுத்தியது உள்ளிட்ட சட்டபூர்வமான வாபஸ் பெற முடியாத வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளில் சட்டபூர்வமான ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.