

மூதாட்டியிடம் செயினை பறித்து விட்டு பைக்கில் தப்ப முயன்ற கொள்ளையனை பெண் போலீஸ் ஒருவர் விரட்டிப் பிடித்தார்.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சாலையில் குகனேஸ்வரி(72) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரருகே வந்த இளைஞர் ஒருவர், “செயின் பறிப்பு நடக்கும் இடத்தில், இவ்வளவு நகைகளை அணிந்து செல்லலாமா? நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துச் செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்ட குகனேஸ்வரி யும் 8 சவரன் செயினை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார். மறு விநாடியே அந்த கைப்பையை பறித்துக்கொண்டு இளைஞர் தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன குகனேஸ்வரி, ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த போக்குவரத்து பெண் போலீஸ் கல்பனா, மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொள்ளையனை விரட்டினார்.
தனது கூட்டாளி தயாராக வைத்திருந்த பைக்கில் ஏறி தப்ப முயன்ற கொள்ளையனின் சட்டையை கல்பனா லாவகமாக பிடித்தார்.
அவர் போலீஸ் உடையில் இருந்ததால் அருகே இருந்தவர்களும் உதவிக்கு வர, கொள்ளையன் வசமாக சிக்கினான். பின்னர் வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்க, அவர்கள் கொள்ளையனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பிடிபட்டவரின் பெயர் சலீல் என்பதும், அவர் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் பிடிபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.