Published : 05 Feb 2021 04:46 PM
Last Updated : 05 Feb 2021 04:46 PM

ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே வாபஸ் பெறப்படும்: ஸ்டாலின் உறுதி

கோவில்பட்டி

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் வாபஸ் பெறப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.

இதில், கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு புகார் மனுக்களை வழங்கினர். கூட்டத்தின்போது, கயத்தாறு ஒன்றியம் குருவிநத்தம் ஊராட்சி இலந்தைபட்டி கிராமத்தை சேர்ந்த அய்யச்சாமி மகள் பார்வதி, தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெரினா பிரபு, தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் பொது பஞ்சாயத்து தலைவர் ராபர்ட் வில்வராயர், தூத்துக்குடியை சேர்ந்த வான்மதி, கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பை சேர்ந்த அய்யப்பன், கோவில்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி, வெங்கடேசன், பிரேமா ஆகியோர் பேசினார்.

இதில், அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “தூத்துக்குடியில் ஸ்டர்லைட் ஆலை பிரச்சினையில் 100 நாட்கள் போராடிய மக்கள் 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக பேரணியாக வந்தனர். ஆட்சியர் இருந்து மனுவை வாங்கியிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. ஆனால், ஆட்சியின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு அந்த இடத்தை விட்டு ஆட்சியர் வெளியே சென்றுவிட்டார். அந்த பேரணியைக் கலைக்க வேண்டும், ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் சென்னை கோட்டையில் இருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டனர்.

அதனால், கூட்டத்தை கலைப்பதற்காக தடியடி நடந்து, துப்பாக்கி சூடு நடந்து, 13 பேரை காக்கை குருவியைப் போல் சுட்டுத் தள்ளியுள்ளனர். அது ஒரு கருப்பு நாள்.

இந்த சம்பவம் நடந்தபோது, முதல்வரிடம் கேட்டபோது, அப்படியா. நான் இன்னும் டிவி பார்க்கவில்லை என முதல்வர் சொல்லக்கூடிய நிலை தான். அவர் அன்று சேலத்தில் தனது உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவர் நேராக வந்து பார்க்கவில்லை. வருத்தமும் தெரிவிக்கவில்லை.

அந்த கொடுமைக்கு பிரதமர் கூட இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. அப்போது அதற்குரிய நடவடிக்கை உறுதியாக எடுப்போம்.

அதுமட்டுமல்ல அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே வாபஸ் வாங்குவோம். உடனடியாக ரத்து செய்வோம்.

மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஆண், பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் போன்ற அருமையான யோசனை கூறிய உங்களுக்கு நன்றி. உப்பள தொழிலாளர்களின் நலனை காக்கும் அரசாக திமுக அரசு நிச்சயமாக இருக்கும்.

கருணாநிதி ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என பெயரை சூட்டி அழகுபார்த்தவரும் கருணாநிதி தான். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம்.

பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் சுய உதவிக்குழுக்களை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

நான் துணை முதல்வராக இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்துக்கு போகும்போது மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் இருந்தாலும் அவர்களுக்கு சுழல்நிதி வழங்கிவிட்டு தான் செல்வேன்.

ஆனால், இன்று இருக்கக்கூடிய ஆட்சி மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இன்னும் 3 மாதங்கள் தான் உள்ளன. நீங்கள் இருக்க வேண்டிய இடம் கோட்டை இல்லை. புழல் சிறையில் தான் இருக்கப் போகிறீர்கள்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி தொகுதியில் 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்த கோவில்பட்டியில் உள்ள பிரச்சினைக்கு முழுமையாக நிரந்தரமாக தீர்வு கண்டுள்ளாரா?

கோவில்பட்டி நகரின் 2-வது பைப் லைன் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி வந்தபின்னர் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். மந்தமாக பணிகள் நடைபெறுகின்றன. 60 சதவீத பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 2-வது குடிநீர் திட்டத்தை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதனை தொடங்கி வைத்துள்ளார்.

ஆனால், இன்றும் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காத நிலை தான் உள்ளது. கிராமப்புற பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதுவரை கொண்டு வரப்படவில்லை.

சாலைகள் அமைத்துத் தரும் பணிகளும் முழுமையடையவில்லை. தேர்தல் வரப்போவதால் சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளார்.

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை தரமற்றதாக அமைக்கப்பட்டதால் விரிசல் விழுந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

சுரங்கப்பாதை அருகே அணுக சாலை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை, என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x