

கடலூர், குறிஞ்சிப்பாடியில் உள்ள பரவணாற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணியில் முக்கியப் பங்காற்றிய முதுபெரும் விவசாய சங்கச் செயலாளர் குமுடிமூலை இராமானுஜம் இன்று காலமானார்.
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்த சாமி. இராமானுஜம் எம்.ஏ., என குறிஞ்சிப்பாடி வட்டார கிராமப் பொதுமக்களால் அன்பாக அழைக்கப்பட்ட சாமி.இராமானுஜம், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.
இவர், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதி கிராமங்களில் பரவணாற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி நடைபெற முக்கியப் பங்காற்றியவர். இவரது பணியால் தற்போது பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் தற்போது வேளாண் பணிகள் நடந்து வருகின்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன, ஐஎன்டியுசி., தொழிற்சங்க முன்னாள் செயலாளர், உழைப்பாளர் பொதுநலக் கட்சி மாவட்டச் செயலாளர் என இவர் பல பதவிகளை வகித்தவர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கம், வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நலச் சங்கம் ஆகிய சங்கங்களை நிறுவிய சாமி.இராமானுஜம், அதன் செயலாளராக விவசாய நலன் சார்ந்த பொதுப் பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வந்தவர்.
மறைந்த இராமானுஜத்தின் இறுதி ஊர்வலம் நாளை காலை (6-ம்தேதி) சனிக்கிழமை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான குமுடிமூலையில் நடைபெறுகிறது.