

2020-2021ஆம் நிதியாண்டிற்கு திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்றுப் பாலினத்தவருக்காக தையல் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கான விசேஷ செயலியையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்துகொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில், ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களின் கீழ் பட்டதாரியல்லாதோருக்கு ரூ.25,000/- நிதியுதவியும், பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியும் வழங்கப்படுகிறது. மேற்படி நிதியுதவித் தொகையுடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மூலம் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தைக் கடந்த 17.05.2011 முதல் தொடங்கி வைத்து, 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வந்தது.
பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 23.05.2016 அன்று திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்பட்டு வரும் தங்க நாணயத்தை 8 கிராமாக உயர்த்தினார். மேற்கண்ட திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், 2011-2012ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் நிதியாண்டு வரை, மொத்தம் 12,50,705 பயனாளிகளுக்கு 1,791 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 6,099.08 கிலோ தங்கமாகவும், நிதியுதவியாக ரொக்கம் 4,371 கோடியே 22 லட்சம் ரூபாய், என மொத்தம் 6,162 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-2021ஆம் நிதியாண்டிற்குத் திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிடும் விதமாக, முதல்வர் பழனிசாமி 7 பயனாளிகளுக்குத் தங்க நாணயங்களும் திருமண நிதியுதவித் தொகையையும் வழங்கித் தொடங்கி வைத்தார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் 2020-21ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், மூன்றாம் பாலின உறுப்பினர்கள் கொண்ட தையல் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 100 மூன்றாம் பாலினரைக் கொண்டு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மூன்றாம் பாலினர் தையல் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாம் பாலினர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 4 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். இதன் மூலம், மூன்றாம் பாலினருக்குத் தையல் தொழில் பயிற்சி அளித்துப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லாச் சீருடை திட்டத்தின் கீழ் சீருடை தைத்து வழங்கும் பணியினை மற்ற தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது போன்று மூன்றாம் பாலினருக்கும் வழங்கி அவர்களும் நிரந்தர வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் 2019-2020ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினர், அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி சமூகப் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்றாம் பாலினர் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பிறர் அறிந்திடாத வண்ணம் தாமாகவே முன்வந்து பதிவு செய்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கைபேசி செயலியைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டுகளில் சமூக நலத்துறைக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 8 நபர்களும், தட்டச்சர் பணியிடங்களுக்கு 37 நபர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சமூக நலத்துறையில் பணியாற்றி பணியிடையே இறந்த ஊழியர்களின் 26 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிடத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த 71 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி 4 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்".
இவ்வாறு சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.