Published : 05 Feb 2021 04:08 PM
Last Updated : 05 Feb 2021 04:08 PM

எழுவர் விடுதலை; ஆளுநர் வித்தியாசமாகச் செயல்படுகிறார்; முதல்வர் அரசியலில் தெளிவில்லாமல் பேசி வருகிறார்: துரைமுருகன் பேட்டி

செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன்.

வேலூர்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் 'தேர்தல் சட்ட அலுவலகம்' திறப்பு விழா இன்று (பிப். 5) காலை நடைபெற்றது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்தார். அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறும்போது, "7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்த பின்னரும், தமிழக ஆளுநர் தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குடியரசு தலைவருக்குத்தான் உள்ளது என்றும் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. மாநில அமைச்சரவை மற்றும் அனைவருமே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறோம் என்றால் அதனை 99 சதவிகிதம் நிறைவேற்ற வேண்டியது ஆளுநரின் கடமை.

ஆனால், ஆளுநர் வித்தியாசமாகச் செயல்படுகிறார். அமைச்சர்களை மதிப்பது போலும் உள்ளது, மதிக்காததைப் போலும் உள்ளது. முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தபோதும் 'செய்கிறேன்' என பேசி காபி, அல்வா கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனால், அதற்கு முன்னரே கடிதம் எழுதிவிட்டார் என்பது இப்போதுதான் தெரியவருகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் நாங்கள் நாடமாடுவதாகக் கூறுகிறார். இதில் யார் நாடகமாடுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். முதல்வரிடம் உண்மையை மறைத்துப் பேசும் குணம் ஆளுநருக்கு இருப்பது பாராட்டுக்குரியதல்ல.

இந்த நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது தெரியவேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றால் இதுகுறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். முதல்வர் கொஞ்சம் கலங்கிப் போய் உள்ளார். அவர்களது கட்சியின் சூழ்நிலைகளால் அரசியலில் தெளிவில்லாமல் பேசி வருகிறார்.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூர் வரை முதல்கட்டப் பணிகள் நிறைவடைந்தன. கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் எந்த ஒரு கால்வாயும் வெட்டாமல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு தற்போது பிரதமரை வைத்து அடிக்கல் நாட்டுவது வெட்கக்கேடான விஷயம்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே இந்தியா என்று மன்னராட்சி காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் உரிமைகளை டெல்லி சென்று பெறுவதற்கு தமிழக அமைச்சர்களுக்கு தைரியமில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x