

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ரவிச்சந்திரனை 2 மாதம் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன், பேரறிவாளன், நளினி உளளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் 6-ல் தீர்ப்பளித்தது.
அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.
கரோனா பரவல் காரணமாக ரவிச்சந்திரனை 3 மாதம் பரோலில் விடுதலை செய்யக்கோரி மனு அளித்த போது, மத்திய அரசின் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருப்பதால் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது என சிறை நிர்வாகம் மறுத்தது. இதை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரோல் மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. இருப்பினும் பரோல் மறுக்கப்படுகிறது. எனவே, ரவிச்சந்திரனை 2 மாத பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என ஆளுனர் தெரிவித்துள்ளார் என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் திருமுருகன் வாதிடுகையில், ரவிச்சந்திரனை விடுதலை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்யவில்லை. அவரை 2 மாதம் பரோலில் விடுதலை செய்யவே கோரப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை பிப். 26-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.