Published : 05 Feb 2021 04:13 PM
Last Updated : 05 Feb 2021 04:13 PM

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு பாமகவுக்குக் கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12 ஆயிரத்து 110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். விவசாயிகளின் துயரங்களைத் துடைக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்கள், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது என்ற நிலை நிலவி வந்த சூழலில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் பொருளாதார நெருக்கடிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு தீர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பாமகவுக்குக் கிடைத்த வெற்றியாகும். பருவம் தவறிப் பெய்த மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 'அனைத்தையும் இழந்த விவசாயிகள்: பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி 15ஆம் நாள் உழவர் திருநாளில் மிகவும் விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

'தமிழ்நாட்டு விவசாயிகள் எவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை. ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் செய்வதற்குத் தேவையான இடுபொருட்களை அவர்கள் கடன் பெற்றுத்தான் வாங்குகின்றனர். இப்போதும் அவர்கள் நம்பிக்கையுடன் கடன் வாங்கித்தான் சாகுபடி செய்திருக்கின்றனர். கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிக அதிக அளவில் விளைச்சல் இருக்கும்; அதனால் வருவாயும் அதிகமாக இருக்கும் என்ற விவசாயிகளின் நம்பிக்கையை, ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை பெய்த மழை முற்றிலுமாக சிதைத்துவிட்டது.

அறுவடைக் காலங்களில் விவசாயிகளின் கண்களில் இருந்து வழிய வேண்டிய ஆனந்தக் கண்ணீர், அதற்கு முன்பே சோகக் கண்ணீராக வழியத் தொடங்கியுள்ளது. அவர்களின் இழப்பையும், சோகத்தையும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மிகவும் குறைவு. அரசு வழங்கும் இழப்பீட்டைக் கொண்டு வாங்கியக் கடனுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அண்மைக்காலங்களில் விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஒரே அரசியல் கட்சி பாமகதான். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கு பாமக முதன்மைக் காரணமாக இருந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. விவசாயிகளின் நலனுக்காக பாமக தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளிக்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x