Published : 05 Feb 2021 03:39 PM
Last Updated : 05 Feb 2021 03:39 PM

பேரறிவாளன் விடுதலை; பிப். 9ஆம் தேதிக்குள் ஆளுநர் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நாடகமாடக் கூடாது எனவும், பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை:

"பேரறிவாளன் விடுதலை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருப்பதாகக் கூறி, அது தொடர்பான கோப்புகளை மத்திய அரசுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்திருக்கிறார். உச்ச நீதிமன்ற ஆணைப்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநரின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு கடந்த மாதம் 21-ம் நாள் விசாரணைக்கு வந்தபோது, அது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஒரு வாரத்திற்குள் ஆளுநர் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர்.

அதன்படி, கடந்த 28-ம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதன் பின்னர் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் ஆளுநர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க இயலும் என்று கூறி, அதுகுறித்த கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். அதை மத்திய அரசு சட்டப்படி ஆய்வு செய்து முடிவெடுக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடாகும்.

1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானங்கள் அடங்கிய கோப்புகள் தமிழக ஆளுநருக்கு 09.09.2018இல் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பின் கடந்த 25.12.2020 அன்றுதான், 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை; குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று ஆளுநர் முடிவெடுத்தார். இடைப்பட்ட 871 நாட்களாக இது தெரியாமல்தான் ஆளுநர் இருந்தாரா? ஒரு சாதாரண முடிவெடுப்பதற்குக் கூட 871 நாட்கள் எடுத்துக் கொள்ளும் ஆளுநரால் ஒரு மாநிலத்தை எவ்வாறு சிறப்பாக வழிநடத்த முடியும்?

2. 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சில நாட்களில், அந்தக் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகளை மறுத்து 13.09.2018 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், '7 தமிழர் விடுதலை குறித்து சட்ட ஆலோசனை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்தக் குறிப்பையும் ஆளுநர் மாளிகை அனுப்பவில்லை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முடிவை ஆளுநர் மாளிகையே எடுக்கும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தமக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தை அனுப்பப் போவதில்லை என்றும் கூறிய ஆளுநர், இப்போது அம்முடிவிலிருந்து பின்வாங்கி, கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியது ஏன்?

3. ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரித்து வரும் பல்முனை கண்காணிப்புக் குழுவின் விசாரணை அறிக்கைக்காக ஆளுநர் காத்திருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் கடந்த 29.07.2020 சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் சார்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்திருந்தார். 6 மாதங்களுக்கு முன்பு வரை 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தாம் தான் முடிவெடுக்கப்போவதாகக் கூறி வந்த ஆளுநர், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் சூழலில், இந்த விவகாரத்தை மத்திய அரசின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தது ஏன்?

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உண்டு என்று 06.09.2018 அன்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி தான் 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு பரிந்துரைத்தது. அப்போது, அதையேற்று தமிழக அரசின் பரிந்துரையை ஆய்வுக்கு ஏற்றுக்கொண்ட ஆளுநர், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்?

5. பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அது குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; குடியரசுத் தலைவருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கில் நேர்நின்ற மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம்; அவர் அடுத்த 3 நாட்களில் முடிவெடுப்பார் என்று உறுதியளித்தார். அதற்கு அடுத்த சில நாட்களில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் டெல்லியில் சந்தித்து 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் ஆளுநர் அவரது பொறுப்பைத் தட்டிக்கழிப்பது ஏன்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்துவிட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே விரும்புகிறது. ஆனாலும், மிகவும் எளிதாக முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு விவகாரத்தில், அவர்களின் விடுதலையை தாமதப்படுத்தும் நோக்குடன் ஆளுநர் மாளிகை பல நாடகங்களை அரங்கேற்றுவது நியாயமோ, மனித நேயமோ இல்லை.

தமிழக ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை இருந்தால், 7 தமிழர் விடுதலை குறித்து, அதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளான பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை உரியவர்கள் உணர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x