

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் மருத்துவம், காவல், வருவாய் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜன.16-ம் தேதி தொடங்கியது. கரூர் மாவட்டத்திலும் கடந்த ஜன.16-ம் தேதி மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (பிப். 5) மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"தமிழக அரசு சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வருவாய், காவல்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இன்று நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். வழக்கமான ஊசி போடும்போது உள்ள வலிகூட இந்தத் தடுப்பூசியில் இல்லை. களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள முன்களப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.
கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய முன்களப் பணியாளர்களாக 10 ஆயிரத்து 11 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை 2,468 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்".
இவ்வாறு ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.
'நம்பிக்கையுடன் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்; பாதுகாப்பாக உணர்கிறேன்' என்ற பதாகையை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி ஏந்தினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.