

பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும், ஆவணங்களையும் ஆராய்ந்ததில், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜனவரி 21 அன்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தின் மீது 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உறுதியளித்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு மீதான விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்திருந்தது.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலில் இந்த விவகாரத்தில் 4 வாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தக் குழப்பம் தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் முன்பு இன்று முறையிடப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், ஏற்கெனவே இதற்கு முன்னர் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த நிலைப்பாடான 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து நீதிபதிகள், ஆளுநர் முடிவெடுக்க 1 வாரம் காலம் அவகாசம் வழங்குவதாகவும், இந்த வழக்கு மீதான விசாரணையை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஆளுநர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் “பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பாக அனைத்து விவரங்களையும், ஆவணங்களையும் ஆளுநர் ஆராய்ந்தார். இதனையடுத்து பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என ஆளுநர் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியது தொடர்பான வழக்கு வரும் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.