

தஞ்சாவூர் அருகே நண்பன் வீட்டில் பணத்தைத் திருடியதாகக் கூறி, கண்களைக் கட்டிக் கம்பால் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலாக வெளியானதால், மனவேதனை அடைந்த தாக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். பக்கத்து ஊரான கோனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரும் ராகுலும் நண்பர்கள்.
இந்நிலையில், கடந்த பிப். 1-ம் தேதி லெட்சுமணன் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை ராகுல்தான் எடுத்திருக்கலாம் எனக் கருதிய லெட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ராகுலை அழைத்து விசாரித்துள்ளனர்.
அப்போது, ராகுல், தான் பணம் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார், ஆனாலும், லெட்சுமணனின் நண்பர்கள் விடாமல் ராகுலின் கண்களைத் துண்டால் கட்டி, கம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, ராகுல் நான் எடுக்கவில்லை எனக் கூறி, விட்டுவிடுமாறு கெஞ்சி கதறியும் விடாமல் தாக்கியுள்ளனர்.
இந்தக் காட்சிகளை லெட்சுமணனின் நண்பர்களே செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்து அதனை பிப். 3-ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த ராகுல், திருட்டுப் பட்டம் சுமத்தியதாலும், வீடியோவில் அடிவாங்குவதைக் கண்டு மனமுடைந்து 3-ம் தேதி மாலை எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக வீட்டிலிருந்தவர்கள் ராகுலைக் காப்பாற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இளைஞர் ராகுல் அடிவாங்கும் வீடியோ தற்போது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானதைப் பார்த்த அம்மாபேட்டை போலீஸார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுலிடம் புகாரினைப் பெற்று, லெட்சுமணனின் நண்பர்கள் மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த விக்கி (25) கோனூரைச் சேர்ந்த ராஜதுரை (24), பார்த்திபன் (25), சரத் (24) ஆகிய நான்கு பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், லெட்சுமணன் மற்றும் விக்கியின் சகோதரர் ஐயப்பன் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதில் விக்கி, ஐயப்பன் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது திருட்டு, கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழும், விக்கி, ஐயப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடிவாங்கிய இளைஞர் ராகுல், லெட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியில் உள்ள ஆற்றில் மணல் அள்ளும் கூலி வேலை செய்து வருவதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர் நேற்று (பிப். 04) இரவு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்தும் நடந்த சம்பவம் குறித்தும் விசாரித்தனர்.