Published : 05 Feb 2021 10:28 AM
Last Updated : 05 Feb 2021 10:28 AM

எழுவர் விடுதலை விவகாரம்; மத்திய பாஜக அரசு - ஆளுநர் - அதிமுக அரசு மூவர் கூட்டணியின் கபட நாடகம்: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

எழுவர் விடுதலையில் மத்திய பாஜக அரசு - ஆளுநர் - அதிமுக அரசு மூவர் கூட்டணியின் கபட நாடகம் நடப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை:

"பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்து இருக்கின்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், ஏழு தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழக ஆளுநரின் முடிவுக்கு மத்திய பாஜக அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய பாஜக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 2018, செப்டம்பர் 6இல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

அதன்பின்னர்தான் செப்டம்பர் 9, 2018இல் தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் தமிழக அமைச்சரவையின் தீர்மானம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தைக் கேட்க அனுப்பியதாகத் தகவல் வந்தது.

மீண்டும் இதே வழக்கில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 2019, மே 9ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் முடிவெடுக்க அறிவுறுத்தியது. அதன் பின்னரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக ஆளுநர் ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் உள்ளதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அமர்வு தமிழக ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி, சிறைக் கைதிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது என்பதைத் தொடர்ச்சியாக பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் - எதிர் - இந்திய அரசு வழக்கில் 1981ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு மிகத் தெளிவாக வழிகாட்டுதல் அளித்திருக்கின்றது.

மாரூராம் வழக்கில் ஏற்கெனவே மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கின்றது என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்குச் சட்டப்படி அதிகாரம் இருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163 (1)-ன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, ஆளுநர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனாலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஏழு தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருப்பது அநீதியாகும். மத்திய பாஜக அரசும், தமிழக ஆளுநரும், அதிமுக அரசும் இந்தக் கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

நாட்டின் சட்டத்தையும், நாடாளுமன்ற நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்காமல், அலட்சியப்படுத்தி வரும் ஒரு கூட்டத்தின் கையில் அரசு அதிகாரம் சிக்கிக் கொண்டதன் விளைவை நாடு சந்தித்து வருகின்றது. மத்திய பாஜக அரசு - தமிழக ஆளுநர் - எடப்பாடி பழனிசாமி அரசு மூவர் கூட்டணியின் சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான அராஜகப் போக்கை தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x