

பாதுகாப்பு, கட்டுமானம் உள்ளிட்ட 15 துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் ஏற்படாது என அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மத்திய பாஜக அரசு தளர்த்தியுள்ளது.
கட்டுமானம், டிடிஎச் கேபிள் டிவி சேவை, காபி, ரப்பர், பாமாயில், ஆலிவ், ஏலக்காய் தோட்டம் அமைத்தல், வரி இல்லா கடைகள் ஆகிய துறைகளில் 100 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் துறையில் நேரடி அந்நிய முதலீடு செய்தவர்கள் முதலீட்டை திரும்ப எடுக்கவும், திட்டத்தை கைவிடவும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கட்டுமானப் பரப்பு, குறைந்தபட்ச முதலீடு ஆகிய முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீடு அரசின் ஒப்புதலுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வந்தது. இனி அரசின் அனுமதியின்றி அனுமதிக்கப்படவுள்ளது. செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கவும் இனி அரசின் அனுமதி தேவையில்லையாம். ரூ. 5 ஆயிரம் கோடி வரையிலான திட்டங்களுக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியமே அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த 5-12-2012-ல் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘காங்கிரஸ் வெளிநாட்டினருக்கு நாட்டை தாரை வார்த்து கொடுக்கிறது’’ என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அப்போது மோடி ஆட்சியிலே நேரடி அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத முடிவை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
அண்ணா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமணச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏழைகளின் வாங்கும் சக்தியையும், விலைவாசி உயர்வையும் கருத்தில் கொண்டு சேவை வரி, கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
நீதிமன்றம் வரை சென்று காவல் துறை பணியில் திருநங்கை பிரித்திகா யாஷினி சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன மழையினால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடலூர் மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிடவில்லை. கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன. நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்தி மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.