கவாலாவை காவு வாங்கிய ‘கத்திகள்’!

கவாலாவை காவு வாங்கிய ‘கத்திகள்’!
Updated on
2 min read

காவாலா! இந்த தெலுங்கு சொல்லுக்கான தமிழ் அர்த்தம் "வேணும்" என்பதுதான். எதைப் பார்த் தாலும் அடைய நினைக்கும் ஒரு ரவுடியைத்தான் கர்நாடகத்தில் இப்படி அழைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் காவாலா என்று அவனைக் கூப்பிடுவதை சுருக்கி கவாலா என்று மாற்றிவிட்டனர் போலும்!

1989-களில் பெங்களூர் மடிவாளா பகுதியில் தனது ரவுடியிஸத்தின் மூலம் மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விஜயகுமார் என்பவர்தான் கவாலா என்ற பெயரோடு வலம் வந்திருக்கிறார்.

இந்த கவாலா கடந்த 24 -ம் தேதி இரவு பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டது பெங்களூர் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

யார் இந்த கவாலா?

கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவாளா காவல்நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் வசித்து வந்தவர் கவாலா என்கிற விஜயகுமார் (40). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வறுமை காரணமாக சிறு வயது முதலே வன்முறையை கையில் எடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் ஒரு ரவுடி கும்பலில் சேர்ந்து சிறு, சிறு தவறுகளை செய்துவந்த கவாலா, தனக்கென ஒரு கும்பலை உருவாக்கி கட்டபஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என தொழில்(!) செய்து வந்தார். அதன்பிறகு பில்டிங் காண்ட்ராக்டராகவும், கன்னடத் திரைப்படங்களுக்கு பைனான்சியராகவும் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை முன்னேற்றினார். கன்னட திரையுலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தியதன் மூலம் சினிமாத் துறையில் உள்ள கால்ஷீட் பிரச்சினை முதல் கொடுக்கல் வாங்கல் வரை அனைத்தும் கவாலாவுக்கு அத்துபடி. இதேபோல், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களிடம் மிகவும் நெருக்கமாகி தனது வட்டாரத்தை பெரிதாக்கிக்கொண்டார்.

ரவுடி அவதாரம்

1989-ம் ஆண்டு முதல் ரவுடியாக வலம் வந்த கவாலா மீது கர்நாடக மாநிலத்தில் 6 கொலை, 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் கொள்ளை, ஆயுதங்கள் கடத்தல் உள்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருமுறை கூட காவல்துறை இவரை எந்த வழக்கிலும் கைது செய்யவில்லை என்பதிலிருந்தே இவருடைய செல்வாக்கை நாம் தெரிந்து கொள்ளலாம். பல வழக்குளில் தானே சரணடைந்து, சிறைக்குச் சென்று தனது அதிகாரத்தை வளர்த்து வந்துள்ளார்.

தொழில் போட்டி

கவாலாவை சுற்றி எப்போதும் நண்பர்கள், அடியாட்கள் கூட்டம் இருக்கும். இவரை போலவே பெங்களூர் பான்ஸ்வாடியைச் சேர்ந்த குட்டி என்கிற திருக்குமார் கும்பலும் அந்த பகுதியில் ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. இது கவாலா தரப்புக்கு கடும் சவாலாக மாறவே, தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள குட்டி தரப்பை அழிக்க நினைத்தார் கவாலா. இருதரப்பும் தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதிக் கொண்டனர். இதனால் இருதரப்பிலும் பலர் கொலை செய்யப்பட்டனர். இருவரும் பரஸ்பரம் தீர்த்துகட்ட சமயம் பார்த்து காத்துகொண்டிருந்த நிலையில், காவல்துறையும் கவாலாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கவாலா வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் குடியேறினார். தொடர்ந்து அவர் அங்கு தங்கியிருந்தபோதும் குட்டி தரப்புக்கும் கவாலா தரப்புக்கும் மோதல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் குட்டியை தீர்த்துகட்டியே ஆக வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்த கவாலா, தனது ஆட்கள் மூலம் குட்டியைத் தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார். அது தோல்வியில் முடியவே, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியில் யாருக்கும் தெரியாமல் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபடியே பெங்களூரில் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்திருக்கிறார். இது குட்டி தரப்புக்கு தெரியவரவே கவாலாவை மீண்டும் பெங்களூருக்கு நுழையவிட கூடாது என கங்கணம் கட்டியவர்கள், அவரை தீர்த்துகட்ட சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 24-ம் தேதி பெங்களூர் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த ‘ஒன்வே’ கன்னட பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தனது கூட்டாளிகளுடன் காரில் வந்துள்ளார். வழியில் கூட்டாளிகள் இறங்கிவிட்டனர். கவாலா மட்டும் தனியாக ஓசூருக்கு வந்துகொண்டிருந்தார். ஓசூர் சிப்காட்டுக்குள் கார் வந்ததும், அவரை கொலை செய்ய பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், கார் கண்ணாடிகளை உடைத்தது. பின்னர் கவாலா மீது மிளகாய்ப் பொடியைத் தூவி காரிலிருந்து தப்பி ஓடியவரை மடக்கி 16 இடங்களில் கொடூரமான முறையில் வெட்டி சாய்த்தது. கொலைவெறி கும்பல். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கவாலா யார் என்பது தமிழக காவல்துறையினருக்கு முதலில் தெரியவில்லை. அவரது செல்போனில் உள்ள எண்களை கொண்டு, மனைவி சாந்திக்கு தகவல் தெரிவித்த பின்னர்தான் கொலை செய்யப்பட்டது கர்நாடக மாநிலத்தின் “டாப் 10” ரவுடிகளில் ஒருவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கவாலா தேர்ந்தெடுத்த கத்தி ஆரம்ப கட்டத்தில் அவருக்கு வளர்ச்சியைத் தேடித்தந்தாலும், அதே கத்திதான் இன்று அவரது உயிரையும் பறித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in