

நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.101 கோடியே 70 லட்சத்தில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் 900 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த 7 லட்சத்து 50 ஆயிரம் கால்நடைகளுக்காக ரூ.30.44 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சை அறை, ஆய்வகம் மற்றும் சிகிச்சை கூடத்துடன் 150 கால்நடை ஆய்வக மருந்தகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதுதவிர கிருஷ்ணகிரி, பூந்தமல்லியில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையம், நாகை மாவட்டம் பழையாறில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூரில் மீன் இறங்கு தளங்கள் ரூ.46.34 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
நெல்லை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூரில் மீன் விதைப் பண்ணைகள், ஈரோட்டில் மீன் குஞ்சு பொரிப்பகம், தஞ்சையில் இறால் வளர்ப்புப் பண்ணை, தூத்துக்குடியில் உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடம், தஞ்சையில் மீன் விற்பனைக் கூடம் ஆகியவை ரூ.19 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளனs.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.47.50 லட்சம் மதிப்பில் பெரம்பலூரில் கட்டப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.4 கோடியே 90 லட்சம் செலவில் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான மீன்பதன மையம், விடுதி, கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையில் கெண்டை மீன் பொரிப்பகம், அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கால்நடை, மீன்வளத் துறைகளுக்கு மொத்தம் ரூ.101 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான மீன் இறங்கு தளங்கள், மீன்பிடி துறைமுகம் மற்றும் புதிய கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும், நாகையில் ரூ.12 கோடியில் புதிதாக கட்டப்படும் மீன்வளப் பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையா, பி.வி.ரமணா, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், துறை செயலாளர் ச.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.