

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை எதிர்த்து, தமிழக டிஜிபி திரிபாதியிடம், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் இணைந்து புகார் அளித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஜன.27-ம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது கரோனா சிகிச்சைக்காக அவர், மருத்துவமனையில் இருந்தார்.
சிகிச்சை முடிந்த பின்னர் அவர் ஓய்வெடுக்க புறப்பட்ட போது, அதிமுக கொடியை தனது வாகனத்தில் பயன்படுத்தினார். சசிகலாவின் இந்த செயலுக்கு அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் அவர் வரும் பிப்.8-ம் தேதி சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க அமமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் டிஜிபி அலுவலகம் சென்றனர்.
அங்கு டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
புகார் தொடர்பாக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக கொடியை சசிகலா மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை காவல்துறை மூலம் அவருக்கு தெரிவிக்கவே டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறோம்.
அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு தார்மீக உரிமை இல்லை. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர மற்றவர்கள் கொடியை பயன்படுத்தக்கூடாது.
அதிமுகவில் உறுப்பினராக இருந்தால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. அதிமுக சட்ட விதிகளின் படி, உறுப்பினர் அட்டையை சசிகலா புதுபிக்கவில்லை. எனவே அவர் அதிமுக உறுப்பினர் இல்லை.
உறுப்பினராக இல்லாதவரை எதற்காக கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இயக்கம் இரண்டாக உடைந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் ஆகியோர் நியமனத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. தேர்தல் ஆணையமும் இதை ஏற்றுக் கொண்டு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கும்போதே அதிமுகவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை எனக்கூறி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் சசிகலாவின் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இனிமேல் அவர்கள் ஐநாசபையில் தான் புகார் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.