Published : 04 Feb 2021 08:14 PM
Last Updated : 04 Feb 2021 08:14 PM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணம் குறைப்பு: ராமதாஸ் வரவேற்பு

கடலூர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டிருப்பதும், எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13,610 ஆகவும், எம்.டி., எம்.எஸ். கல்விக் கட்டணம் ரூ.30,000 ஆகவும் அரசுக் கல்லூரிகளுக்கு இணையாக குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

பல் மருத்துவம், செவிலியர், பிசியோதெரபி படிப்புகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. மாணவர்களும் இதற்காகப் போராடி வந்தார்கள். கட்டணக் குறைப்பால் ஏழை மாணவர்கள் பயனடைவார்கள் என்பதில் மகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி 50 நாட்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உயர்கல்வி நிர்வாகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத் துறை நிர்வாகத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது.

ஆனாலும், கட்டணம் தொடர்பாக அரசாணை வராததால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகளின் கட்டணத்துக்கு நிகராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குத் திரும்புமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x