Last Updated : 04 Feb, 2021 05:24 PM

 

Published : 04 Feb 2021 05:24 PM
Last Updated : 04 Feb 2021 05:24 PM

நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை வெறும் 15 நிமிடங்களில் பார்வையிட்டுச் சென்ற மத்தியக் குழுவினர்: விவசாயிகள் அதிருப்தி

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு அதிவேகமாக பார்வையிட்டுச் சென்றது. 15 நிமிடங்கள் மட்டுமே சேதங்களைப் பார்வையிட்ட குழுவினர், பயிர்ச் சேதங்களை பார்வையிடாமல் சென்றது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெய்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் நெல், வாழை, உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருந்த தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யும் உறைகிணறுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் குடிதண்ணீர் விநியோகம் பாதிப்படைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்காலிகமாக அந்தந்த பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவும் லாரிகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அரசின் இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் எண்ணெய் வித்து வளர்ச்சி இயக்குநரக இயக்குநர் மனோகரன், நிதித் துறை துணை இயக்குநர் மகேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று வந்தனர்.

திருநெல்வேலியில் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் சேதமடைந்த கூட்டுக் குடிநீர் திட்டங்களை பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, வெள்ள சேதங்களை அவர்களுக்கு விளக்கினார்.

சேதங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட குழுவினர் 15 நிமிடங்களில் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு கிளம்பிச் சென்றனனர்.

மத்தியக் குழுவின் ஆய்வு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 5839 ஹெக்டேரில் தானிய பயிர்களும், 163 ஹெக்டேரில் நெற்பயிர்களுமாக மொத்தம் 6002 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதற்காக ரூ.6.16 கோடி நிவாரணம் அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 19 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகின்றன.

அதில் 18 கூட்டு குடிநீர் திட்டங்கள் தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் சேதமடைந்திருந்தன. அவை அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் ரூ.8.86 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட பகுதிகளில் தானிய பயிர்கள் மழை வெள்ளத்தால் பெருமளவுக்கு சேதமடைந்தன. அப்பகுதிகளுக்கு மத்திய குழு செல்லாமல் கூட்டு குடிநீர் திட்டத்தைப் பார்வையிட்டுச் சென்றது விவசாயிகளுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x