

தமிழகத்தின் மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் தேர்வு மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே நடைபெற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படுகின்றன. இந்த கிளினிக்களில் பணிபுரிய 2000 மருத்துவர்களை தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்வது தொடர்பாக 2020 டிசம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவர்களை தேர்வு செய்யும் போது வேலைவாய்ப்பு முன்பதிவு, இட ஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படாது. எனவே, மினி கிளினிக்குகள் மருத்துவர்களை தனியார் ஏஜென்சி மூலம் தேர்வு செய்வது தொடர்பாக அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு சார்பில், மினி கிளினிக் மருத்துவர்கள் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாவட்ட சுகாதார மையங்கள் வழியாகவே மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா அவசர காலத்தை கருத்தில் கொண்டே மினி கிளினிக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மினி கிளினிக் மருத்துவர்கள் மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகவே தேர்வு செய்யப்பட வேண்டும். மினி கிளினிக் மருத்துவர்களின் பணிக்காலம் தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்ற கூறி மனுவை முடித்து உத்தரவிட்டனர்.