

தொடர் மழையால் சாகுபடி செய்த நெல்லும், வைக்கோலும் தேறவில்லை என, ஆய்வுக்கு வந்த மத்தியக் குழுவிடம் தஞ்சை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்த நிலையில், சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணன் ஜெய் சிங், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குநர் சுபம் கார்க், மத்திய மீன் வள மேம்பாட்டுத் துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் காவாளிபட்டி, நம்பிவயல் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல், கடலை உள்ளிட்ட பயிர்களை இன்று (பிப். 04) ஆய்வு செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தனர். அப்போது, விவசாயிகள், சேதமான நெற்பயிர்களை மத்தியக் குழுவினரிடம் காட்டி, "மகசூல் ஆன நெல்லும் வைக்கோலும் தேறாது. அப்படியே உழவு செய்ய வேண்டியதுதான். எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் சாகுபடிக்காக செய்த செலவை ஓரளவாவது எடுக்க முடியும்" என வேதனை தெரிவித்தனர்