

கரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு இன்று (பிப். 04) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"மருத்துவத் துறையினரைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களான உள்ளாட்சி, வருவாய், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவாய்த் துறையில் 1,362 பேர் பதிவு செய்திருந்தனர். நான் இன்று தடுப்பூசி எடுத்துக்கொண்டேன்.
தொடர்ந்து, வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ மாணவர்கள் 100க்கும் அதிகமானோர் இன்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளது. இதுவரை 4,342 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 50 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிடும்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பாதிப்பு நேரிடுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். கரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்துக்குத் தேவைப்படும் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து அரசின் நிலையான வழிகாட்டுதல் வந்த பிறகு, அதைப் பின்பற்றி பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்படும்".
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.