

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக சினிமாவில் 'டூப்' போட்டு நடித்தவரும், நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் இணைந்து நாடாண்ட காலம் வரை பயணித்து எம்ஜிஆரின் இறுதிவரை துணை நின்றவருமான கே.பி.ராமகிருஷ்ணன் நேற்று (பிப். 03) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (பிப். 04) கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தி:
"அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும் ஸ்டண்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
எம்ஜிஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது மருமகனும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான இ.என்.நாராயணனுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்".
இவ்வாறு ஈபிஎஸ்- ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.