Published : 08 Nov 2015 10:58 AM
Last Updated : 08 Nov 2015 10:58 AM

மின் கட்டணம்: மாதாந்திர கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்- ராமதாஸ்

2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கும் முறைக்குப் பதிலாக மாதாந்திர மின் கட்டணக் கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம்தாஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மின்வெட்டை சீரமைக்காமல் தமிழகத்தை மேலும் இருளில் தள்ளினார். அதேநேரத்தில் தடையின்றி வழங்கப்படாத மின்சாரத்திற்கு இரு முறை கட்டணத்தை உயர்த்தி ரூ.15,224 கோடி கூடுதல் சுமையை பொதுமக்கள் மீது சுமத்தினார். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து நிலை மின்பயன்பாட்டாளர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மானியத்தை ஜெயலலிதா தலைமையிலான அரசு முற்றிலும் ரத்து செய்து விட்டதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

உதாரணமாக தற்போது இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,330 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆனால், 501 யூனிட் பயன்படுத்தும் போது, மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுவதால், ரூ.2137 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்துவதற்காக ரூ.807 அதிகமாக செலுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய அநீதி ஆகும். தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் மின்சாரப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. போதாக்குறைக்கு தமிழக அரசின் சார்பில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஆட்சியில் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கப் பட்டன. இதனால், பெரும்பான்மையான வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கும் அதிக மின்சாரம் செலவாவது சாதாரண ஒன்றாகிவிட்டது. அவ்வாறு இருக்கும் போது 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு மானியத்தை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதுமட்டுமின்றி, மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக ஒரு மாதத்தின் 10& ஆம் தேதி மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. சரியான தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால் பல வீடுகளில் 450 முதல் 490 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தாமதமாக கணக்கீடு செய்யப்படும் போது தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்தால் 500 யூனிட்டுகளை தாண்டியிருக்கும். மின்வாரியத்தின் தவறுக்காக நுகர்வோரை அதிகக்கட்டணம் செலுத்தச் சொல்வது பெரும் குற்றமாகும்.

மேலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அந்த மாதத்தில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் தான் மின்கட்டணத்தை மாதம் தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், நுகர்வோரைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1984 ஆம் ஆண்டில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்ட போது இருந்த சூழலுக்கும் இப்போதைக்கும் இடையே பல வித்தியாசங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் கணக்கீட்டாளர் ஒவ்வொரு வீட்டிலும் மின் பயன்பாட்டை அளந்து, அதற்கான கட்டணத்தை அவராகவே கூட்டிப் பெருக்க வேண்டும். இதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், இப்போது கையக்க கருவிகள் வழங்கப்பட்டிருப்பதால் எவ்வளவு மின்கட்டணம் என்பதை அக்கருவியே கணக்கிட்டு பதிவு செய்கிறது. மேலும், கடந்த காலங்களில் அனைத்து நுகர்வோரும் மின்வாரிய அலுவலகத்தில் வரிசையில் நின்று தான் பணம் செலுத்த வேண்டும். ஆனால், இப்போது 50%க்கும் அதிகமானவர்கள் வங்கிகள் மூலமாகவும், ஆன்லைன் முறையிலும் பணம் செலுத்துகின்றனர். இதனால், மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிப்பதில் மின்சார வாரியத்திற்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

எனவே, மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; அத்துடன் மாதத்திற்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தொடர்ந்து கட்டண மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x