கரோனா தொற்றால் 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் பூரண குணமடைந்தார்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு

கரோனா தொற்றால் 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் பூரண குணமடைந்தார்: சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு
Updated on
1 min read

கரோனா தொற்றால் 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குணமடைந்தார்.

தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கடந்த ஜன.5-ம்தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொங்கலுக்கு முன்னதாக வீட்டுக்குச்சென்ற அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், உறவினர்கள் விருப்பத்தின்பேரில் 19-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அன்று இரவு அங்கிருந்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் சுவாசிப்பதில் பிரச்சினை இருந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் காமராஜை நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது மருத்துவமனை இயக்குநர் பிரசாந்த் ராஜகோபாலன், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை துறை தலைவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநர் டி.சுரேஷ் ராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு 95 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரை குணப்படுத்தியுள்ளனர். இது மருத்துவத் துறைக்கே ஓர் சவாலான விஷயம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரணவார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நாளை (இன்று) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிதாக 514 பேருக்கு தொற்று

இதற்கிடையே தமிழகத்தில் புதிதாக 514 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 314, பெண்கள் 200 என மொத்தம் 514 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 145 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு8 லட்சத்து 39,866 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in